நீடித்த நிலையான ஆரோக்கியம் நுகர்வோருக்கு விழிப்புணர்வு
திருப்பூர்; திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது.விழாவுக்கு, சங்க தலைவர் காதர்பாஷா தலைமை வகித்து பேசுகையில், ''நீடித்த நிலையான ஆரோக்கியமான வாழ்க்கையை பேண வேண்டும் என்பதே, இந்தாண்டின் நுகர்வோர் தின கருத்தாக வழங்கப்பட்டிருக்கிறது. வருங்கால சந்ததி நிம்மதியாக வாழ, இயற்கையின் பரிணாம வளர்ச்சிக்கு பாதகம் விளைவிக்காமல், இப்புனித பூமி பல நுாறு ஆண்டுகள் செழிப்புற இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும்,'' என்றார்.அவிநாசி வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டான்லி பிரபு பேசுகையில், ''பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவு பதார்த்தங்களை வாங்கும் போது, அதன் தயாரிப்பு, காலாவதி தேதி மற்றும் அப்பொருள் குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்,'' என்றார். உணவுப் பொருட்களில் கலப்படம் கண்டறிவது குறித்து செய்முறை பயிற்சியும் அளித்தார்.அரசு வக்கீல் வெங்கடாசலமூர்த்தி, சங்க செயற்குழு உறுப்பினர் வக்கீல் சேகர், துணைத் தலைவர் தனசேகர், அமைப்பு செயலர் கிருஷ்ணமூர்த்தி, மூத்த ஆலோசகர் ராமலிங்கம், பொருளாளர் சென்னியப்பன், பயிற்சியாளர் அன்பழகன், இணை செயலாளர் வேதகிரி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சங்க பொது செயலாளர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.