| ADDED : ஜன 15, 2024 01:29 AM
பல்லடம்;திருப்பூர், கோவை மாவட்டங்களில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான விசைத்தறிகள், கூலி அடிப்படையில்தான் இயங்கி வருகின்றன.மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளருடன் கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு ஒப்பந்த கூலியை வழங்கவில்லை என, விசைத்தறியாளர்கள் போராட்ட களத்தில் குதித்தனர்.இரண்டு மாவட்ட கலெக்டர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூலி உயர்வு பிரச்னை முடிவுக்கு வந்தது. தற்போது மீண்டும் கூலி உயர்வு பிரச்னை தலைதுாக்கி வருகிறது. இதற்கு தீர்வு காணும் முயற்சியில் விசைத்தறியாளர்கள் இறங்கியுள்ளனர்.திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், 'ஒரு சிலரை தவிர்த்து, பெரும்பாலான ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய சூழலில், தொழிலாளர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் செய்து தரவேண்டிய கட்டாயம் உள்ளது.விலைவாசி உயர்வுக்கு இடையிலும், தொழிலாளர்களுக்காக இவற்றை செய்து வருகிறோம். விலைவாசி உயர்வுக்கு ஏற்ற கூலி உயர்வு இருந்தால் மட்டுமே, தொழிலை நடத்த முடியும்.ஜவுளி உற்பத்தியாளர்கள் சிலர் மேற்கொள்ளும் கூலி குறைப்பு நடவடிக்கையால், விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அமைச்சர் சாமிநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி கூலி பிரச்னைக்கு தீர்வு காண திட்டமிட்டுள்ளோம். அமைச்சர் ஒப்புதல் அளித்ததும் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். தை பிறந்துள்ளதால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்'' என்றார்.