தமிழக அரசின் வேளாண் அறிக்கை; விவசாய சங்கத்தினர் கண்டனம்
பல்லடம்; தமிழக அரசின் வேளாண் உற்பத்தி குறித்த அறிக்கை தவறானது என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து அதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:வேளாண் வளர்ச்சி, மீன் வளம், கேழ்வரகு மற்றும் கொய்யா உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும், 5 வேளாண் பட்ஜெட் வாயிலாக மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. உண்மையில், வேளாண்மையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. நெல், கரும்பு, பருத்தி உற்பத்தியில் தமிழகம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது.குறிப்பாக, நெல் உற்பத்தியில், தமிழகத்தின் பங்களிப்பு, 8.62 சதவீதத்தில் இருந்து, 5.64 சதவீதமாக குறைந்துள்ளது. கரும்பில், 10.25 சதவீதம் சர்க்கரை சத்து இருந்தால் மட்டுமே குறைந்தபட்ச ஆதார விலை வழங்க முடியும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழகத்தில் உற்பத்தியாகும் கரும்பில், 9.5 சதவீதம் மட்டுமே சர்க்கரை சத்து உள்ளது. வாழைப்பழ உற்பத்தியில் மட்டுமே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.பால் மற்றும் நெல் உற்பத்தியில் முதல் ஐந்து இடத்தில் தமிழகம் இல்லை. தேங்காய் உற்பத்தியில் இந்திய அளவில் மூன்றாம் இடத்திலும், கரும்பு உற்பத்தியில் பின்னடைவையும் சந்தித்து வருகிறது. விவசாய குடும்பங்களின் சராசரி மாதாந்திர வருமானத்தில், 29,701 ரூபாயுடன் மேகாலயா முதலிடத்திலும், 11,924 ரூபாயுடன் தமிழகம், 14வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில், 61 சதவீத குடும்பங்கள், தொடர் கடனில் உள்ளதாக தமிழக அரசின் திட்டக்குழு அறிக்கை கூறுகிறது.மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உற்பத்தி செலவு அதிகம் உள்ளதால், மத்திய அரசு நிர்ணயம் செய்யும் குறைந்தபட்ச ஆதார விலை தமிழக விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆவதில்லை. எனவே, நெல், கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும் என விவசாயிகள் போராடுகின்றனர். இதற்கிடையில், தவறான வேளாண் அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது வேதனை அளிக்கிறது. உண்மை தன்மையை அலசி ஆராய்ந்து விவசாயிகளை காப்பாற்றும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.