மக்களுக்கு வரிச்சுமை; அ.தி.மு.க.,வினர் மனு
திருப்பூர் : ''புதிய வரி, ஏற்கனவே உள்ள மக்களின் வரிச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., வினர் கோரிக்கை மனு அளித்தனர்.அ.தி.மு.க., திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கட்சியினர், வார்டு கவுன்சிலர்கள் திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:திருப்பூரில் ஏற்கனவே, 150 சதவீதம் வரி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கட்டடங்களை மறு அளவீடு செய்து, வரி உயர்வு ஏற்படுத்தி மக்களின் வரிசுமையை அதிகரிக்க செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. மறு அளவீடு செய்வதை நிறுத்தி, மக்களின் வரிச்சுமையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு, ஆறு சதவீதம் உயர்த்திய, அனைத்து வரிகளையும் ரத்து செய்து, திருப்பூர் மக்கள், தொழிலை பாதுகாத்திட வேண்டும்.மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்தம் பெற்றுள்ள எஸ்.டபிள்யூ.எம்.எஸ்., நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., - பி.எப்., முறையாக பிடித்தம் செய்து, மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் நல சட்டத்தின் கீழ் கிடைக்க கூடிய சலுகைகளையும், பலன்களையும், தொழிலாளர்களுக்கும் கிடைத்திட உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.---பாக்ஸூக்குரிய படம்கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளதை, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
பாதுகாப்பின்றி கல்வெட்டு
கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:கடந்த, 2015 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டது. கடந்த, ஆறு மாதத்துக்கு முன், கலெக்டர் அலுவலகத்தில் கட்டட சீரமைப்பு பணிக்காக அடிக்கல் நாட்டு மற்றும் திறப்பு விழா கல்வெட்டு அகற்றப்பட்டு, பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது. மந்த கதியில் நடக்கும் பணியால், வரலாற்றை கூறும் கல்வெட்டு மாயமாவதற்கோ, உடைந்து போக வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக கல்வெட்டுகளை மீண்டும் அதே இடத்தில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.