பல்லடம்: பல்லடத்தில், திட்டமின்றி கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயால், பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, சி.எம்.நகர் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் வசதி கிடையாது. இதன் காரணமாக, மழைக்காலங்களில், மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து வீதிகளில் தேங்கி நின்று, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, கழிவுநீர் கால்வாய் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், 'டிஸ்போசல் பாயின்ட்' இல்லாமல், உரிய திட்டமிடல் இன்றி கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டது. நகராட்சி கழிவுநீர் கால்வாயுடன் இணைக்க திட்ட மிடப்பட்ட நிலையில், நகராட்சி பகுதியில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, திட்டம் கைவிடப்பட்டது. இதனால், 'டிஸ்போசல் பாயின்ட்' இல்லாமல், கழிவுநீர் மீண்டும் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் பயனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து, கழிவுநீர் கால்வாய் பணி நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இனி அதிகாரிகளை நம்பி பயனில்லை என, அதிருப்தி அடைந்த பொதுமக்கள், குடியிருப்புகள் தோறும் 'சோக் பிட்' அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். மக்களுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் கால்வா ய், தற்போது, செடிகள் முளைத்து, கற்கள், மண் மண்டி உள்ளது. உரிய திட்டமிடல் இன்றி, கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாயால், பல லட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் தற்போது மண்ணோடு மண்ணாகி உள்ளது.