உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருத்தேரில் அருள்பாலித்த சோமாஸ்கந்தர் விண்ணை பிளந்த ஓம் நமசிவாய... கோஷம்

திருத்தேரில் அருள்பாலித்த சோமாஸ்கந்தர் விண்ணை பிளந்த ஓம் நமசிவாய... கோஷம்

திருப்பூர்; ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி தேர், 'ஓம் நமசிவாய...சிவாய நம ஓம்' என்ற கோஷத்துடன், சிவகைலாய வாத்திய இசையுடன், பக்தர் வெள்ளத்தில் கோலாகலமாக பவனி வந்தது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம், நேற்று, விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும் நடந்தது. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், சூலதேவர் அமர்ந்த சிறிய தேர் முன் செல்ல, ஸ்ரீவீஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர், சோமாஸ்கந்தருடன் பக்தர் வெள்ளத்தில் பவனி வந்தது. உள்ளூர் மற்றும் பவானி, கரூர், திருச்சி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் பங்கேற்றனர்.சிவகன வாத்தியம் இசைத்து, ஆடியபடியும்; சங்குநாதம் எழுப்பியபடியும் தேருக்கு முன்பாக சென்றனர். கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி பெண்கள் பங்கேற்றனர்.'தமிழ் மணம்' விருது பெற்ற, அம்மன் விஸ்வநாதன் குழுவினரின் பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் ஓதுவார் தியாகராஜன் திருமுறை பன்னிசை பாராயணம் செய்து வந்தார். கோவில் ஆஸ்தான வித்வான் சிங்காரவேலன் குழுவினர், நாதஸ்வர இன்னிசை வழங்கினர்.திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் சேக்கிழார் வேடமிட்ட சிறுவர்கள், பன்னிரு திருமுறை ஏடுகளை கையில் எடுத்தபடி, பஞ்சவர்ணக்குடை நிழலில் ஊர்வலமாக சென்றனர். கேரள சண்டை வாத்தியம், பேண்டு வாத்தியம், சிவகன வாத்தியம், வானவேடிக்கையுடன், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பக்தர்கள், 'ஓம் நம சிவாய... சிவாய நம ஓம்' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், 'சிம்கோ' சம்பத் உள்ளிட்ட அறங்காவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கோவில் அலுவலர்கள், வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.சரியாக, 6:00 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டது; நான்கு தேர்வீதிகளில் உலாவந்து, இரவு, 8:40 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனை செய்த போது, 'தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி' என கோஷமிட்டு பக்தர்கள் வழிபட்டனர்.முன்னதாக, பூமார்க்கெட் அருகே வந்த போது, பூ வியாபாரிகள் மலர் துாவி வரவேற்றனர். பிரதோஷ வழிபாட்டு குழுவினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேர்த்திருவிழாவை கண்காணிக்கவும், வீடியோ பதிவு செய்யவும், கோவில் நிர்வாகம் சார்பில் வீடியோ வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று மாலை 4:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P Karthikeyan
ஜூன் 10, 2025 14:25

அதுதான் சிவா கைலாய வாத்தியம் ..சிவனுக்கு பாரம்பரியம் நாதஸ்வரம் இல்லை .


Sundaran
ஜூன் 10, 2025 07:28

பாரம்பரிய மேளம் மட்டுமே இசைக்க படவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை