உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கோவில் ஆடித்தபசு; மெய்யுருகிய சிவனடியார்கள்

அவிநாசி கோவில் ஆடித்தபசு; மெய்யுருகிய சிவனடியார்கள்

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆடித்தபசு வைபவம் நடந்தது. திருக்கயிலாயத்தில், சிவபெருமான் அக்னித்தாண்டவம் ஆடும்போது, ஜூவாலை பொறுக்க முடியாமல் பார்வதி தேவி, இறைவனிடம் மன்றாடுகிறார். அப்போது, சிவபெருமான். திருப்புக்கொளியூர் (அவிநாசி) எனும் ஊரில் சென்று தவம் இருக்குமாறு கூறுகிறார். அவ்வாறே பார்வதி தேவியும், தவமிருக்க வருகை புரியும்போது வான்வெளியில் எவ்விதமான தொல்லைகள் இருக்கக் கூடாது என ஆகாசராயராக முருகப்பெருமான் உடன் வந்து காவலுக்கு இருக்கிறார். இதனை தொடர்ந்து, பார்வதி தேவி மா மரத்தில் அமர்ந்து எம் பெருமானை நினைத்து தவம் புரிகிறார். 2 ஆயிரம் ஆண்டுகள் கடந்ததும், மா மரம், பாதிரி மரமாக மாறுகிறது. சிவபெருமான், கங்கை மற்றும் காலபைரவரும் ஒன்றாக இணைந்து தவம் இருந்த பார்வதி தேவிக்கு காட்சி அளிக்கின்றனர். பார்வதி தேவியின் தவத்திற்காக சிவபெருமான் அளித்த வரத்தின் மகிமையாகவும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவருக்கு வலப்பாகத்தில் கருணாம்பிகை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதனையே ஆடித்தபசு விழாவாக கொண்டாடப்படுகின்றது. அவ்வகையில், நேற்று நடந்த விழாவில், 1,008 ருத்ராட்சம், 108 பவளம் மற்றும் 308 ஸ்படிகம் கொண்ட லிங்க திருமேனியாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய எம்பெருமான், ரத வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று எல்லாம்வல்ல எம்பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி