இருப்பது மாநகராட்சியில் இணைத்ததோ ஊரகத்தில் மின் வாரியம் கூத்து
திருப்பூர்; எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல், 20 கி.மீ., தொலைவில் உள்ள, பஸ் வசதியில்லாத பகுதிகளில் உள்ள மின் வாரிய உபகோட்டங்களுடன், திருப்பூர் மாநகராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன; இதனால் மின் நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், அவிநாசி, திருப்பூர், ஊத்துக்குளி கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரியான முன்னறிவிப்பு செய்யாமல், முதலிபாளையம், பெருமாநல்லுார் உபகோட்டங்கள், மற்ற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பெருமாநல்லுார் உபகோட்டத்தில் இருந்த, பி.என்., ரோடு, பாண்டியன் நகர், பூலுவபட்டி, பெருமாநல்லுார் மின்வாரிய அலுவலகங்கள், 20 கி.மீ., தொலைவில் உள்ள, குன்னத்துார் உபகோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. முதலிபாளையம் உப கோட்டத்தில் இருந்த, முதலிபாளையம், காசிபாளையம், நாச்சிபாளையம், ஆர்.வி., நகர், நல்லுார், சர்க்கார் பெரியபாளையம் அலுவலகங்கள், முறையான பஸ் வசதி இல்லாத ஊத்துக்குளி உபகோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கூறியதாவது: எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல், 20 கி.மீ., தொலைவில் உள்ள, பஸ் வசதியில்லாத பகுதிகளில் உள்ள உபகோட்டங்களுடன், திருப்பூர் மாநகராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. 'ஆன்லைன்' மூலம் மின்வாரிய சேவை கிடைத்தாலும், மிக தொலைவில் அலுவலகம் சென்றுவிட்டதால், மூன்று மாதங்களாக பணிகள் முடங்கியுள்ளன. மின்நுகர்வோருக்கான சேவைகள், உடனுக்குடன் கிடைத்து வந்த நிலைமாறி, பணிகள் முடங்கியுள்ளது. அதிகாரிகள், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் செய்த இந்த மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும். உபகோட்ட அலுவலகங்கள், முதலிபாளையம், பெருமாநல்லுாரில் விரைவில் துவங்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர். மின் நிறுத்தம் கூட தெரிவதில்லை திருப்பூரை சேர்ந்த மின்நுகர்வோர், குமார் நகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் குறைபாடுகளை தெரிவித்து தீர்வு பெற்று வந்தனர். கடந்த சில வாரங்களாக, ஊத்துக்குளி கோட்டத்தில் இருந்து, மின் நிறுத்தம் தொடர்பான முன்னறிவிப்பும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இனிமேல், நுகர்வோர் பிரச்னைகளை தெரிவிக்க, 20 கி.மீ., தொலைவில் உள்ள ஊத்துக்குளி கோட்ட அலுவலகத்தில் நடக்கும் குறைகேட்பு கூட்டத்துக்கு சென்றுவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும், திருப்பூர் கோட்டத்திலேயே தொடர வேண்டும் என்பது மின் நுகர்வோரின் எதிர்பார்ப்பு.