பணியாளர் வருவதில்லை தேங்கிய குப்பை மலை
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 55வது வார்டுக்கு உட்பட்ட வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், ஏராளமான வீதிகள் உள்ளன. கடந்த இரு மாதங்களுக்கு மேலாக வார்டு பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை.வார்டு கவுன்சிலர் ஆனந்தி கூறியதாவது:மக்கள் தொகை அடிப்படையில் குறைந்தபட்சம், 48 துாய்மைப் பணியாளர்கள் இங்கு பணியாற்ற வேண்டும். தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது முதல், 21 பேர் மட்டுமே வருகின்றனர். இது மெல்ல குறைந்து தற்போது, 10 பேர் மட்டுமே பணிக்கு வருகின்றனர். இப்பகுதியில் ஏழு பேட்டரி வாகனங்கள், மூன்று ஆட்டோக்கள் குப்பை சேகரிப்பு பணிக்கு ஒதுக்கப்பட்டன. தற்போது, மூன்று வாகனங்கள் மட்டுமே, அதுவும் பெயரளவுக்கு வந்து செல்கிறது.ஒரு வாரத்துக்கும் மேலாக வீடுகளில் குப்பை பெற பணியாளர்கள் வரவில்லை. இதனால், வீடுகளுக்குள் குப்பையை தேக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார பிரிவினரை தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.