திருப்பூர்: அமெரிக்க வரிவிதிப்பால், திருப்பூரில் அசாதாரண சூழல் நிலவுவதால், வட்டி மானிய திட்டம், அவசரகால கடனுதவி உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை செய்ய, மத்திய அரசு முன்வர வேண்டுமென, ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவின், அதிகபட்ச இறக்குமதி வரி விதிப்பால், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஜவுளித்துறையினர் அதிகம் பாதிக்கப்படுவதால், பாதிப்பு குறித்து கேட்டறிய, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று தொழில்துறையினரை, சென்னையில் சந்தித்தார். சந்திப்பின் போது, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், ஒட்டுமொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை அமைச்சரிடம் வழங்கினார். பாதிப்புகள் என்னென்ன?
* அமெரிக்காவின் அதிகபட்ச வரிவிதிப்புக்கு பிறகு, பெரும்பாலான வர்த்தகர்கள், வரிச்சுமையை குறைக்க, 25 சதவீதம் வரை தள்ளுபடி கேட்கின்றனர். * சில வர்த்தகர்கள், அமெரிக்க வரி உயர்வு பிரச்னை தீரும் வரை, ஒப்புக்கொண்ட ஆர்டர் மீதான உற்பத்தியை அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும் என்கின்றனர். * எதிர்பாராத வரி உயர்வால், வழக்கமான உற்பத்தியை தொடர முடியாமலும், தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. * அமெரிக்காவை சார்ந்துள்ள ஏற்றுமதியாளர்கள், திடீர் நெருக்கடியால், வங்கிக்கடனை திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. * ஆர்டர் ஒப்பந்தமானதும், 45 முதல், 90 நாட்களுக்கும் ஆடைகளை அனுப்ப வேண்டும். அதற்காக, நுால் கொள்முதல் துவங்கி, பேக்கிங் வரையில், 4,500 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடக்க வேண்டும். இவை, அமெரிக்க வரி உயர்வால் ஸ்தம்பித்து நிற்கின்றன. * திருப்பூரில் மட்டும், 1,100 கோடி முதல், 1,200 கோடி ரூபாய் அளவுக்கு, ஏற்றுமதியாளருக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. * எதிர்பாராத வகையில், இக்கட்டான நிலையில் ஏற்றுமதியாளர்கள் சிக்கியுள்ளனர். அமெரிக்க சார் ஏற்றுமதியாளர்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க, மத்திய அரசு விரைந்து உதவ முன்வர வேண்டும். அதற்கான தீர்வுகள்...
* ஏற்றுமதியாளர்களின் வங்கி கணக்கு, செயல்படாத வங்கி கணக்கு என்று முடக்கம் செய்யும் அவகாசம், 90 நாட்கள் என்பதை, 180 நாட்களாக அதிகரிக்க வேண்டும். * நடைமுறையில் உள்ள குறுகிய கால தொழிற்கடன்களை திருப்பி செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும். இத்தகைய கடன்களை, இரண்டு ஆண்டு கடன்களாக மாற்றிக்கொடுக்க வேண்டும். * உலக சந்தை போட்டியை சமாளிக்கும் வகையில், அவசர கால கடன் உதவி அதிகபட்ச கட்டுப்பாடின்றி வழங்கப்பட வேண்டும். * கடன் செலவை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிக் கடன் மீதான வட்டி மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஏற்றுமதி மதிப்பை கணக்கிடாமல், ஏற்றுமதியாளர்களுக்கும் சமமான சலுகை அளிக்கப்பட வேண்டும். * ஜவுளித்துறையின் சிரமங்களை உணர்ந்து, இ.எஸ்.ஐ., - பி.எப்., பங்களிப்பை செலுத்த ஓராண்டுக்கு விலக்களிக்க வேண்டும். * ஏற்றுமதி நிறுவனங்கள் வர்த்தக இழப்பை சந்திப்பதை தவிர்க்கும் வகையில், மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். * மீண்டும் வரி கட்டுப்பாடு விதித்து, வங்கதேச ஆடை இறக்குமதியை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் அமெரிக்காவின் வரிவிதிப்பு தற்காலிகமானது; இருப்பினும் பாதிப்பு அதிகம். எனவே, நிலைமை சீராகும் வரையில், ஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு நிவாரண உதவியை வழங்க வேண்டும்
கடிதத்தின் முக்கிய அம்சங்கள்
* இந்திய ஜவுளி வர்த்தகத்தில், திருப்பூர் கிளஸ்டர் முக்கிய பங்களிப்புடன் இயங்கி வருகிறது; பின்னலாடை ஏற்றுமதியில், 90 சதவீதம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், திருப்பூரில் இருந்து, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. அதில், அமெரிக்காவின் பங்களிப்பு 34 சதவீதம். * பின்னலாடை நிறுவனங்கள் வாயிலாக, 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். அவர்களில், 65 சதவீதம் பெண்கள். கடந்த நிதியாண்டில், நாட்டின் பின்னலாடை ஏற்றுமதி, 65 ஆயிரத்து 179 கோடி ரூபாய்; திருப்பூர் கிளஸ்டரில், கடந்தை 2023-24ல், 38 ஆயிரத்து, 408 கோடி ரூபாய்க்கும், கடைந்த ஆண்டில், 44 ஆயிரத்து, 747 கோடி ரூபாய்க்கும் ஏற்றுமதி நடந்துள்ளது. * திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பின்னலாடையில், 40 சதவீதம் அமெரிக்கா பங்குவகிக்கிறது; மாதாமாதம், 1500 முதல், 2000 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடக்கிறது.