வெறியாட்டம் அடங்கவில்லை; சோகம் தீரவில்லை
திருப்பூர் : நாய்கள் கடித்ததில், பலியான ஆடுகளை கொண்டுவந்து போட்டு, காங்கயம் ஒன்றிய அலுவலகம் முன் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதிகள் மற்றும் அவிநாசி, உடுமலை, காங்கயம், மூலனுார் என, மாவட்டம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. சில மாதங்களாக, நாய்கள், பட்டிகளுக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக்குதறும் சம்பவங்கள் தொடர்கின்றன.நாய்களின் அட்டகாசத்தால் ஆடுகள் இறப்பது அதிகரித்துவருவது கால்நடை வளர்ப்போருக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்; ஆடுகளை பறிகொடுத்தோருக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றன.காங்கயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரணம்பாளையத்தில், செந்தில் என்பவருக்கு சொந்தமான பட்டிக்குள் நேற்று அதிகாலை ஐந்து நாய்கள் புகுந்து, ஆடுகளை கடித்துள்ளன. 13 ஆடுகளை நாய்கள் கடித்ததில், ஏழு ஆடுகள் பலியாகின.இதனால், அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த விவசாயிகள், பலியான ஏழு ஆடுகளையும் காங்கயம் ஒன்றிய அலுவலகம் முன் கொண்டுவந்து போட்டு, நாய்க்கடிக்கு ஆடுகள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கின்றன. விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கவேண்டும். தெருநாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.போராட்டத்துக்கு முன்னிலை வகித்த பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி மற்றும் விவசாயிகளுடன் பி.டி.ஓ., விமலாவதி, போலீசார் ஆகியோர், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 'உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக,' அதிகாரிகள் கூறினர். அதனை எழுத்துப்பூர்வமாக வழங்க கேட்டு, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
எல்லையில்லாத தொல்லை
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை, 10:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில், நாய்க்கடிக்கு ஆடுகள் பலியாவது தொடர்வது குறித்து, குறைகேட்பு கூட்டத்தில் குரல் எழுப்ப அனைத்து விவசாய சங்கங்களும் முடிவு செய்துள்ளன.கருத்தடை மூலம், தெருநாய்கள் எண்ணிக்கையை குறைக்க மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கையில் விவசாயிகளுக்கு உடன்பாடு இல்லை. தெருநாய்களையும், வெறி நாய்களையும் தொல்லை தரும் விலங்கு பட்டியலில் சேர்க்க வேண்டும்; பிராணிகள் வதை தடுப்பு சங்கம் தெருநாய்களை பிடித்து, தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். நாய்க்கடிக்கு கால்நடைகள் பலியாகும் சம்பவங்களில், போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கை.