உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகிலம் காக்கும் மாரி... அருள்பாலித்தார் தேரில்... மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

அகிலம் காக்கும் மாரி... அருள்பாலித்தார் தேரில்... மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

உடுமலை, ; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில் தேரோடும் வீதிகளில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.உடுமலையில் நுாற்றாண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த, 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.தொடர்ந்து, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாலிகை ஊர்வலம் என உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன.தினமும் அம்மன், காமதேனு, யானை, ரிஷபம், அன்ன வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். திருவிழாவில், நேற்று முன்தினம் மாலை, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று காலை, 6:45 மணிக்கு, சூலத்தேவருடன், பச்சை பட்டுடுத்தி, தங்க ஆபரணங்கள் அணிந்து, மகா சக்தி மாரியம்மன் தம்பதி சமேதரராக, அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட திருத்தேரில் எழுந்தருளினார்.மாலை, 4:20 மணிக்கு, பக்தர்களின் ஓம் சக்தி கோஷம் முழங்க, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களின் வெள்ளத்தில் தேரோடும் வீதிகளில், திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.இதன் சிறப்பு அம்சமாக, பக்தர்கள் முன்னே இழுக்க, யானை பின்னே தள்ளும் பாரம்பரியம் பல ஆண்டுகளாக தொடர்கிறது.நேற்றைய தேரோட்டத்தின் போது, பக்தர்கள் முன்னே வடம் பிடித்து இழுக்க, கேரளா மாநிலம், பாலக்காடு, செர்புலசேரியிலிருந்து, 30 வயதுடைய 'மணிகண்டன்' என்ற யானை, தேரோட்டத்திற்காக வரவழைக்கப்பட்டு, பக்தர்களுக்கு உதவியது.பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, தலைகொண்டம்மன் கோவில் வீதி, தங்கம்மாள் ஓடை என தேரோடும் வீதிகளில், பக்தர்களுக்கு மத்தியில், அசைந்தாடி வந்த தேரில், சுவாமியுடன் எழுந்தருளிய அம்மன் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வழியோரத்தில், ஏராளமான பக்தர்கள் பழம், தானியங்கள் வீசி, மழை வளம், வேளாண் வளம், மக்கள் நலன் சிறக்க வேண்டி, அம்மனை வழிபட்டனர்.தேரோட்டத்தின் போது, உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தேர்த்திருவிழா துளிகள்

 மாரியம்மன் கோவில் தேரோட்டம் காரணமாக, நகரின் பிரதான ரோடுகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், தளி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, பழநி ரோடு என அனைத்து ரோடுகளிலும் பக்தர்கள் திரண்டிருந்தனர். தேரோடும் வீதிகள் மட்டுமின்றி, நகரின் பெரும்பாலான பகுதிகளில், பல்வேறு அமைப்புகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், நீர் மோர், குடிநீர், சர்பத், பானகம் உள்ளிட்ட குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கினர். பக்தர்கள் தேருக்கு, பழங்கள், தானியங்கள், உப்பு வீசியும், தேர்ச்சக்கரத்திற்கு உப்பு வைத்தும் வழிபட்டனர். தேங்காய், பழம், பட்டாடை அம்மனுக்கு வழங்கி, வழிபட்டனர். தேருக்கு முன், செண்டை மேளம், சிவவாத்தியம், பஜனை என பாரம்பரிய இசை முழங்க, பல்வேறு வாத்தியங்கள் முழங்க கோலாகலமாக நடந்தது. தேரோடுகள் வீதிகளை குளிர்விக்கும் வகையில், தண்ணீர் லாரிகளில் நீர் விடப்பட்டது. மாலை, 4:20க்கு தேர் நிலையிலிருந்து கிளம்பிய நிலையில், இரவு, 7:40க்கு நிலைக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை