மேலும் செய்திகள்
மா.திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
02-Dec-2024
உடல் வலி போதாதென்றுஉள்ள வலி கூட்டினாலும்உடைந்து போக மாட்டேன்உயரம் இன்னும் பறப்பேன்-துயரை எல்லாம் துறப்பேன்ஒரு மாற்றுத்திறனாளி உரைப்பதாக அமைந்த கவிதை இது. கடினச் சூழல்களை எதிர்கொண்டு, சவால்களில் சாதிக்கும் மாற்றுத்திறனாளிகள், நம்மில் பலருக்கும் முன்னுதாரணம். உலக மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று, 'உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்துக்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை விரிவுபடுத்த வேண்டும்' என்ற கருத்தை ஐ.நா., சபை முன்வைத்திருக்கிறது. வாய்ப்புகள் அரிது
ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவை மேற்கொள்ளும், 'நியூ தெய்வா சிட்டி' அமைப்பின் நிறுவனர் தெய்வராஜ்:ஆற்றலும், மன வலிமையும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவில் இருந்தாலும், அவற்றை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைப்பதில்லை; அதற்கான அந்தஸ்து, தகுதியை நாம் ஏற்படுத்திக் கொடுக்காமல் உள்ளோம். சிலர் மட்டுமே சாதனையாளர்களாக மாறுகின்றனர். சக மனிதர்கள் போன்று, மாற்றுத்திறனாளிகளையும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களிடம் உள்ள மனக்காயத்தை ஆற்றுப்படுத்த வேண்டும். குறை கேட்டால்தானே
கணபதி, மாவட்ட பொருளாளர், விழுதுகள் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம்:பொங்கலுார் ஒன்றியம், வடமலைபாளையத்தில், 128 மாற்றுத் திறனாளிகளுக்கு, கடந்த, 2017ல் அரசின் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அங்கு, 3 பேர் மட்டுமே நிரந்தரமாக வீடு கட்டி குடியேறியுள்ளனர். மலைப்பாங்கான பகுதியில் சாலை, தெரு விளக்கு, குடிநீர் என எந்த வசதியும் இல்லாத அந்த இடத்தில் குடியேற தயங்குகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு, வீட்டுமனை, பட்டா வழங்க வேண்டும்.மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவதே இல்லை; அவர்களின் குறைகள், அரசின் கவனத்துக்கு எட்டுவதில்லை. மாற்றுத்திறனாளிகள் முகாமில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள, மாற்றுத்திறனாளிகள் அலைய வேண்டியிருக்கிறது. இதுபோன்ற குறைகள் தவிர்க்கப்பட வேண்டும். உதவித்தொகை போதாது
'போலியோவால ரெண்டு கால்களும் செயலிழந்து போச்சு. பனியன் கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருந்தேன்; கொரோனா வந்துச்சு; வேலையில்லைன்னுட்டாங்க. இப்போ கலெக்டர் ஆபீஸ் முன்னாடி பெட்டிக்கடை வச்சு பிழைச்சுட்டு இருக்கேன்...'' என அறிமுகப்படுத்திக் கொண்டார், 'மாற்றுவோம் மாற்றுத்திறனாளிகள்' அறக்கட்டளை நிறுவனர் மகாதேவன்.வீடு, உதவித்தொகை, ஸ்கூட்டி என அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்தால் சீனியாரிட்டி அடிப்படையில், நேர்காணல் முடித்து, நலத்திட்ட உதவி கிடைக்க, ஓரிரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. நலத்திட்டங்களை விரைவுப்படுத்தி வழங்கினால், நன்றாக இருக்கும். அரசின் மாத உதவித் தொகையாக, ஊனத்தின் அடிப்படையில், 2,000, 1,500 ரூபாய் பணம் தருகின்றனர். வாடகை, மின்கட்டணம், காஸ் இணைப்பு என, அடிப்படை தேவைக்கு நிச்சயம் அந்த தொகை போதாது. இயன்றவர்கள் வேலைக்கு செல்கின்றனர்; உழைத்து சம்பாதிக்கின்றனர். இயலாதவர்கள் வாழ்வாதாரத்துக்கே திணறுகின்றனர்: ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். உதவிக்'கரம்' தயார்
முருகானந்தன், பட்டய தலைவர்,திருமுருகன்பூண்டி ரோட்டரிசங்கம்: கோவை மிட்டவுன் ரோட்டரி அமைப்பு முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் முயற்சியில், கைகள் இழந்தவர்களுக்கு செயற்கை கை வழங்க முன்வந்துள்ளது. அதற்கு பயனாளிகளை தேர்வு செய்து, வழங்கும் பணியை திருமுருகன்பூண்டி ரோட்டரி முன்னெடுத்துள்ளது; 75 செயற்கை கை வழங்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இவ்வகை கை வாயிலாக, வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட சாதாரணக் கைகள் வாயிலாக செய்யக்கூடிய, 70 சதவீதம் பணிகளை செய்ய முடியும். மருத்துவரின் சான்று அடிப்படையில், இந்த செயற்கை கை வழங்கப்படும்.
எங்கள் சங்கத்தின் முயற்சியால், திருப்பூரில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கு முன், 7 வகை மாற்றுத்திறன் மட்டுமே வகைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 2016ம் ஆண்டுக்கு பின், 21 வகை மாற்றுத்திறன் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்கள் கூட மாற்றுத்திறனாளிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு வியாபார தளங்கள், நிறுவனங்களில் சாய்தளம், கழிப்பறை கட்டாயம். நிறைய மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்யாமல் உள்ளனர்; எங்கள் அமைப்பின் சார்பில் அரசின் அடையாள அட்டை பெற்றுத்தரும் பணி செய்து வருகிறோம். அப்போது தான் அரசின் மாத பராமரிப்பு உதவித்தொகை, ரயில், பஸ் கட்டண சலுகை, மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தில் கூடுதல் அரிசி என பல சலுகைகள் பெற முடியும். கல்வி, வேலை வாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும். தற்போது மத்திய அரசு, தனித்துவ அடையாள அட்டை கொண்டு வந்துள்ளது; இந்த அட்டை வாயிலாக அனைத்து பலன்களையும் பெற முடியும். நன்கொடையாளர் உதவியுடன் மாதந்தோறும், செயற்கைக்கால் வழங்கும் முகாம் நடத்தி வருகிறோம்.
02-Dec-2024