உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / கானக காதலரின் கைவண்ணம்!

கானக காதலரின் கைவண்ணம்!

பலருக்கும் பலதும் பொழுது போக்கு இருக்கும். இவருக்கு, ஊர் ஊராக சென்று, பறவைகளை தன் கேமரா கண்களால் படம் பிடிப்பதுதான், பொழுதுபோக்கு. கடந்த, 15 ஆண்டுகளில், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் பயணித்து, 900க்கும் மேற்பட்ட பறவைகளை படம் பிடித்து, ஆவணப்படுத்தி வைத்திருக்கிறார், திருப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி.''நான், 12 வயதில் கேமராவை கையில் எடுத்து, படம் பிடிக்க துவங்கினேன்; தற்போது, 54 வயதாகிறது. கேமரா தான் என் பொழுதுபோக்கு மற்றும் எல்லாமும்'' என்ற அறிமுகத்துடன், தன் பயண அனுபவத்தை பகிர்ந்தார்.''கடந்த, 15 ஆண்டுகளாக வன விலங்கு புகைப்படம் எடுப்பதை, பொழுது போக்காக மாற்றிக் கொண்டேன். நாட்டில் உள்ள அனைத்து புலிகள் காப்பகத்துக்கும் சென்று வந்து விட்டேன். புலி, சிறுத்தை, யானை போன்றவற்றை புகைப்படம் எடுப்பதில் தான் துவக்கத்தில் ஆர்வம் இருந்தது. ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல், வேறெந்த வித்தியாசமான கோணத்திலும் விலங்குகளை புகைப்படம் வாயிலாக காண்பிக்க முடியாது என்பதை உணர்ந்து, விதம் விதமான பறவைகளை படம் பிடிக்க துவங்கினேன்.''காஷ்மீரில் இருந்து ஊட்டிக்கு ஆண்டுதோறும், நவ., மாதம், 'காஷ்மீர் பிளை கேச்சர்' என்ற மிகச்சிறிய பறவை வந்து செல்கிறது. அதன் எடை, வெறும், 50 கிராம் மட்டுமே இருக்கும். அதனை பதிவு செய்தது அப்படியொரு ஆனந்தம் கிடைத்தது. நீலகிரி மாவட்ட பயணத்தின் போது, சிறுத்தையும், கருஞ்சிறுத்தையும் ஒரு சேர அமர்ந்திருந்த புகைப்படம் எடுத்தது, 'த்ரில்' அனுபவத்தை தந்தது.அந்தமானுக்கு கிழக்கே, வெறும், 6.5 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட நர்கொண்டம் தீவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 'நர்கொண்டம் ஹார்ன்பில்' என்கிற பறவை, உலகில் இங்கு மட்டும் தான் காணக்கிடைக்கிறது. அதிகபட்சம், 10 முதல், 15 புகைப்பட கலைஞர்கள் தான் அதை ஆவணப்படுத்தியும் உள்ளனர்; அதில் நானும் ஒருவன்.இமயமலை பயணத்தின் போது, 7 ஆயிரம் முதல், 14 ஆயிரம் அடி உயரத்தில் வாழக்கூடிய ப்ளட் பெஷன்ட், பையர் டெய்ல் சன்பேர்டு, ஹிமாலயன்மோனால், ஸ்நோ பார்ட்ரிட்ஜ் என்ற பறவைகளும், என் கேமரா கண்களில் புகைப்படமாகியுள்ளது. இவையெல்லாம் என் பயண அனுபவத்தின் ஓரிரு விஷயங்கள் தான். பக்கம், பக்கமாய் பதிவு செய்ய ஏராளமான விஷயங்கள் உண்டு.நம் நாட்டில், 1,340 வகை பறவையினம் இருப்பதாக சொல்கின்றனர். இமயம் முதல் குமரி வரை, நாட்டின் பெரும் பகுதியை சுற்றி வந்துவிட்டேன்; இதுவரை, 900 பறவையினங்களை படம் பிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறேன். இனி, வட கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் என் சுற்றுப்பயணம் முழுமை பெறவில்லை.மேலை நாடுகளின் மீதான மோகமும், வெளிநாடுகளை சுற்றிப்பார்க்கும் ஆவலும் தான் மனித இயல்பு. ஆனால், நம் நாட்டில், நம் வீட்டை சுற்றி ரசிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. முதலில் அவற்றை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும், என்கிறார் இந்த கேமரா காதலன் கிருஷ்ணமூர்த்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Premanathan Sambandam
மார் 27, 2025 10:44

பாராட்டுக்கள் ஆமாம் சாப்பாட்டுக்கு, மற்ற வாழ்க்கை செலவுகளுக்கு இதில் போதிய வருமானம் வருகிறதா?


சமீபத்திய செய்தி