உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தைப்பூசத்தில் மக்கள் காட்டிய நேசம்... மகிழ்ச்சியில் முகிழ்ந்த மனங்களின் தேசம்!

தைப்பூசத்தில் மக்கள் காட்டிய நேசம்... மகிழ்ச்சியில் முகிழ்ந்த மனங்களின் தேசம்!

கடவுளை பக்தர்கள் தேடிச்சென்று கோவிலில் வழிபடுவது வழக்கம். திருவிழா நடக்கும் போது, தெய்வமே திருவீதியுலா வந்து பக்தர்களை காத்தருள்கின்றன. குறிப்பாக, சமுதாய ஒற்றுமையை பறைசாற்றும் வகையில், தேர்த்திருவிழா பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்டன. அத்தகைய பாரம்பரியத்தின் பின்தொடர்ச்சியாக, தைப்பூச தேர்த்திருவிழாக்கள் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களின் விழாவாக கொண்டாடி முடிந்துள்ளன.'ஊர் கூடி தேர் இழுப்பது போல்...' என்ற பழமொழி, ஊர்மக்களின் ஒற்றுமையையும், ஒற்றுமையின் வலிமை என்பதையும் நிரூபணம் செய்யும் வகையில் அமைந்திருந்தன. தேர்த்திருவிழா என்பது, ஒற்றுமையின் அடையாளம். அங்கே, ஏழை - பணக்காரர் என்ற பாகுபாடு இல்லை; அனைவரும் ஹிந்து மக்கள் என்று ஒன்றுகூடி, ஜாதிகளை மறந்து, தெய்வங்களை துதிக்கின்றனர்; தேர்க்கடை வீதிகளை சுற்றி பார்த்தும், பொருட்களை வாங்கியும் குதுாகலிக்கின்றனர். சினிமா தியேட்டர், பொழுதுபோக்குபூங்கா, சுற்றுலா தலங்கள் என பல பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன. அந்தகாலத்தில், தேரோட்டம் நடப்பது, ஒரு தலைமுறையினரை அடையாளம் காட்டும் புதுவிழாவாக கொண்டாடப்பட்டது.குழந்தைகளுக்கான தின்பண்டங்கள், விளையாட்டுகள், ராட்டிணம் என்று கூறப்படும் விளையாட்டுகள், தேர் மிட்டாய், மாம்பழம், அன்னாசி பழம், தர்பூசணி பழம் விற்பனை, கடலை பொரி, அவித்த சுண்டல் மற்றும் நிலக்கடலை விற்பனை பல இடங்களில் களைகட்டியிருந்தன. வண்ண பலுான்களும், விளையாட்டு கருவிகளும் பரபரத்தன; வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், எவர்சில்வர் மற்றும் பித்தளை பொருட்கள், அரிவாள், அரிவாள்மனை போன்ற இரும்பு பொருட்கள் விற்பனையும் துாள்பறந்தது. தேர்க்கடை வீதி என்றாலே, பெண்களுக்கான பேன்சி பொருட்களுக்கும் பஞ்சமே இருக்காது!

இளமை நினைவுகளில்...

குழந்தைகள் பெற்றோர் தோளின் அமர்ந்து, தேர்க்கடைகளை பார்த்தும், அடம்பிடித்தும் திண் பண்டங்களை வாங்கி உண்டனர். இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து, இளம்பெண்களுக்கு சமிக்ஞை செய்தபடி பின்தொடர்ந்தனர். கேலியும், கிண்டல் பேச்சுகளும் கண்ணியமாக இருந்தன. தங்களது இளமையை நினைவு கூர்ந்தபடி சென்ற ஆண்கள் மற்றும் பெண்கள், தங்கள் கால நண்பர்களையும், நண்பிகளையும், அவர்களது குடும்ப சகிதமாக பார்த்து, அன்பான விசாரிப்பை பறிமாறிக்கொண்டனர்.வயது முதிர்ந்தவர்களும், தங்களது பேரன், பேத்திகளுடன் வந்து, தேர்த்திருவிழாவின் வரலாறுகளையும், தங்கள் கால அனுபவங்களையும் நினைவு கூர்ந்தனர்.பல்வகை பொருள் வியாபாரம் இருந்தாலும், தேர்க்கடையில் இலவசமாக வழங்கும் நீர்மோர், பானகம் அருந்த, டம்ளர் வாங்க பெரும் போட்டியே நடந்து கொண்டிருந்தது சுவாரஸ்யமாக இருந்தது. எவ்வளவு தான் வீடுகளில் சாப்பிட்டாலும், 'பொட்டட்டோ ரோல்', காளான், காலிபிளவர் வறுவல், டில்லி அப்பளம், காரப்பொரி என, பேவரிட்'டான உணவு பண்டங்களை பலரும் மொய்த்துக்கொண்டிருந்தனர்.குழந்தைகளுக்கு இணையாக, நடுத்தர வயதை தாண்டிய ஆண்களும், பெண்களும், பந்து உருட்டி பரிசு பெரும் விளையாட்டிலும், வளையம் வீசி பரிசை அள்ளும் போட்டியிலும், ரப்பர் பந்தை வீசி டம்ளர்களை விழச்செய்யும் விளையாட்டிலும், துப்பாக்கி கொண்டு பலுான்களை சுடும் போட்டியிலும் ரொம்ப 'பிஸி'யாக இருந்தனர்.வீட்டு வேலை, ஆபீஸ் டென்ஷன், குழந்தைகள் ஸ்கூலுக்கு பீஸ் கட்டுவது, 'டூ வீலர்' மற்றும் வீட்டுக்கடன் இ.எம்.ஐ., என, வற்றாத கவலையுடன் இருந்தாலும் கூட, தேர்க்கடை வீதியை ஒருமுறை சுற்றி வந்தால், மனது லேசாகி, உற்சாகம் தொற்றிக்கொண்டதாக, பலரும் மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்டனர்.அத்தகைய அம்சங்களுடன், சமுதாய ஒற்றுமைக்கான விழாவாக, தைப்பூச தேர்த்திருவிழா அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ