மாயமான நீர் வழிப்பாதை; மழைநீர் எப்படி சேகரமாகும்?
பல்லடம், ; பல்லடம் வட்டாரத்தில், விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. சில பகுதிகளுக்கு மட்டுமே பி.ஏ.பி., பாசன நீர் கிடைத்து வரும் நிலையில், பெரும்பா லான விவசாயிகள், குளம் குட்டைகளில் சேகரமாகும் மழைநீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர்.ஆழ்துளை கிணற்று நீர், 1,000 அடிக்கு கீழ் சென்றால்தான் கிடைக்கும் என்று இருக்கும் சூழலில், பருவமழைதான் பெரிதும் கைகொடுக்கிறது. இவ்வாறு ஆண்டு முழுவதும் கிடைக்கும் பருவமழை நீரை சேகரித்து வைப்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.நீர் நிலைகளுக்கு, மழைநீரை கொண்டு செல்வதில் நீர் வழிப்பாதைகள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. குளம், குட்டைகளில் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி வழங்கும் தமிழக அரசு, நீர் வழிப்பாதைகள் குறித்து கண்டுகொள்வதில்லை.பெரும்பாலான நீர் வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பின் பிடியிலும், சீமை கருவேல மரங்கள், புதர்கள் மண்டியும்தான் உள்ளன. மழைநீர் ஓட வேண்டிய நீர்வழிப் பாதைகளில், கழிவு நீரும், குப்பைகளும்தான் ஓடி வருகின்றன.இதன் விளைவாக, நீர் ஆதார குளம் குட்டைகள், பெயரளவுக்கு மட்டுமே உள்ளன. குளம் குட்டைகளை துார்வாரும் நோக்கில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கும் தமிழக அரசு, நீர் வழிப்பாதைகளை துார்வாரவும், மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை செய்தால்தான், எதிர்காலத்தில் நீர் ஆதாரங்கள் மழைநீர் சேகரிக்க பயன்படும்.