உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சந்தைக்கு நிரந்தர கட்டடம் தேவை; மடத்துக்குளத்தில் எதிர்பார்ப்பு

சந்தைக்கு நிரந்தர கட்டடம் தேவை; மடத்துக்குளத்தில் எதிர்பார்ப்பு

உடுமலை; போதிய பாதுகாப்பு இல்லாமல் செயல்படும் வாரச்சந்தையை இடம் மாற்றி, நிரந்தர கட்டடம் கட்டித்தர வேண்டும் என, மடத்துக்குளம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மடத்துக்குளம் பகுதியில், நெல், காய்கறி உள்ளிட்ட விவசாய சாகுபடிகள் பிரதானமாக உள்ளது. விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், சுற்றுப்பகுதி மக்கள் காய்கறி வாங்கவும், மடத்துக்குளத்தில், வாரச்சந்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மடத்துக்குளம் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் துவங்கப்பட்ட சந்தையில், இதுவரை கட்டமைப்பு வசதிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. தற்போது வாரந்தோறும் சனிக்கிழமைகளில், தற்காலிக பந்தல் அமைத்து, காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். போதிய இடவசதி இல்லாததால், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, ஆபத்தான முறையில், வரிசையாக அமர்ந்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்கின்றனர். போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, கடைகள் அமைப்பதுடன், அங்கு வரும் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி கொள்வதால், அப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது. 'மக்கள் தொகை அதிகமுள்ள, விவசாயம் பிரதானமாக உள்ள மடத்துக்குளத்தில், செயல்படும் வாரச்சந்தையை விரிவுபடுத்த வேண்டும். நிரந்தர கடைகள் கட்டி, நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,' என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், சந்தையை இடம் மாற்றி, விரிவுபடுத்துவது குறித்த கருத்துரு அரசுக்கு அனுப்பினர். அதன்பின்னர், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது போக்குவரத்துக்கு இடையூறாகவும், நுகர்வோர் மற்றும் விற்பனையாளர்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத முறையிலும் வாரச்சந்தை இயங்கி வருகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !