அலங்கோலமான அபிராமி நகர் பூங்கா
உடுமலை; உடுமலை அபிராமி நகர் பூங்கா, 25 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், பராமரிப்பின்றி வீணாகி வருகிறது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் பொழுது போக்கும் வகையில், நகராட்சி சார்பில் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. நகரில் பல பூங்காக்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன.அவ்வகையில், உடுமலை அனுஷம் ரோடு, அபிராமி நகரில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 25 லட்சம் ரூபாய் செலவில், பூங்கா அமைக்கப்பட்டது.சுற்றிலும், காம்பவுண்ட் சுவர், பேவர் பிளாக் நடைபாதை, சுற்றிலும் மரங்கள், புல் தரை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், கழிப்பிடம் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பூங்கா பராமரிக்கப்படாமலும், மரம், புற்களுக்கு நீர் பாய்ச்சாமல், காய்ந்தும், புதர் மண்டியும் காணப்படுகிறது. விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருகிறது.இதை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் பல முறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.