ரூ.17.59 கோடியில் திட்டப்பணி அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
பல்லடம்; பல்லடம் வட்டார பகுதியில் நடந்து முடிந்த, 1.6 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவடைந்த திட்டப்பணிகள் மற்றும் 17.59 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்ட பணிகளின் துவக்க விழா நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், நகராட்சி கமிஷனர் மனோகரன், நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திட்டப் பணிகளை துவக்கி வைத்து அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் மூலம், பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை, மக்கள் பணிகள் தடையின்றி நடத்துவதை உறுதி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் மற்றும் துணை முதல்வர், மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.பொதுமக்களின் கருத்துகளும் கேட்கப்பட்ட பின், மக்கள் பாதிக்காத வகையில் வார்டுகள் மறு வரையறை செய்யப்படும். பாலியல் சீண்டல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டசபை தீர்மானத்துக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்றத்தக்கது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.