உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பாசி படர்ந்த அமராவதி ஆறு

 பாசி படர்ந்த அமராவதி ஆறு

திருப்பூர்: அமராவதி ஆற்றில் பல இடங்களில் திடீரென பச்சை நிறத்தில் பாசி அதிகளவில் பரவியது. ஆலைக்கழிவுகள் ஏதேனும் கலந்ததா என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டது. உடுமலையில் துவங்கி பல்வேறு ஊர்கள் வழியாக அமராவதி ஆறு கடந்து செல்கிறது. இந்த ஆற்றின் நீரை நிலத்தடி நீர் ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் பல்வேறு வழியோர பகுதி ஊர்கள் பயன்படுத்துகின்றன. தாராபுரத்தைக் கடந்து வெள்ளகோவில் அருகே, மயில்ரங்கம் பகுதியில் இந்த ஆறு கடந்து செல்கிறது. இதில் அங்குள்ள பாலத்துக்கு அருகே ஆற்றில் பெருமளவில் மண் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. பாய்ந்து செல்லும் நீரிலும் கொத்து கொத்தாக பச்சைப் பாசிகள் கலந்து காணப்பட்டது. இந்த ஆற்றில் இது வரை இல்லாத வகையில் தற்போது இந்த பச்சைப் பாசி கலந்து வருவது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழியோரம் ஏதேனும் ஆலைக்கழிவுகள் இதில் கலந்திருக்கலாம் என அவர்கள் சந்தேகித்தனர். இந்த தகவல் மயில்ரங்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அங்கு சென்று அப்பகுதியைப் பார்வையிட்டனர். அவர்கள் கூறியதாவது: நீரில் வாழும் நுண்ணுயிரிகள் ஆல்கா, சயனோ பாக்டீரியா ஆகியன சில நேரங்களில் அதிகளவில் ஓரிடத்தில் உருவாகும் போது இது போன்ற பச்சைநிறப் பாசிகள் உருவாகும். ஈரப்பதம் நிறைந்த பகுதியில் சூரிய ஒளி அதிகம் படும் போது இது அதிகளவில் ஆல்கா பூக்களாக காட்சியளிக்கும். இது தான் இங்கு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இது இயற்கையான நிகழ்வுதான். நீரின் ஓட்டத்தில் இது தானாகச் சென்று விடும். இதில் எந்த கழிவுகளும் கலக்கவில்லை. இதனால், பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி