உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடிகளில் குறையும் குழந்தைகள் எண்ணிக்கை; ஒளிந்துகிடக்கும் அதிர்ச்சி

அங்கன்வாடிகளில் குறையும் குழந்தைகள் எண்ணிக்கை; ஒளிந்துகிடக்கும் அதிர்ச்சி

திருப்பூர்; கிராமம் மற்றும் நகரங்களில், 2 வயது நிரம்பிய குழந்தைகளை அங்கன்வாடிகளில் சேர்த்து, அவர்களுக்கு, தேவையான ஊட்டச்சத்து உணவு வழங்கி, அவர்கள் ஆரோக்கியத்துடன் வளரவும், ஆரம்பக்கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் கூறியதாவது:குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில், 2 வயது நிரம்பிய குழந்தைகளை அங்கன்வாடிகளில் சேர்க்க அரசு வழிவகை செய்துள்ளது.திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரில், வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் நிறுவனங்களில் குழந்தைகள் காப்பகம் இருப்பின், அங்கு தங்கள் குழந்தைகளை விடுகின்றனர். மாறாக, வீடுகளில் இருக்கும் பெற்றோர், 2 வயது நிரம்பிய குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்புவதில்லை.

கள ஆய்வில் அதிர்ச்சி

கள ஆய்வில் அதற்குரிய காரணத்தை ஆராயும் போது, வீடுகளில் உள்ள தங்கள் குழந்தைகள் குறும்பு செய்யாமலும், தங்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும் இருக்க, அவர்களிடம் பெற்றோர் தங்கள் மொபைல் போன்களை கொடுக்கின்றனர். 2, 3 வயது நிரம்பிய குழந்தைகள் கூட மொபைல் போன் திரையை தொட்டு, கையாள்வதை பெரும்பாலான பெற்றோர் பெருமையாக கருதுகின்றனர்.பெரும்பாலான வீடுகளில், மொபைல்போன்களை கையில் கொடுத்தால் தான், குழந்தைகள் உணவருந்துவதையும் பார்க்க முடிகிறது. ஆனால், இந்த மொபைல்போன் தாக்கம் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு உள்ளிட்ட எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பதை, பெற்றோர் பலரும் உணராமல் உள்ளனர்.

பாதுகாப்பான சூழல்

அங்கன்வாடிகளில், அவர்களுக்கு சத்தான உணவு வழங்குவது மட்டுமின்றி, அடிப்படை கல்வி, விளையாட்டு மற்றும் ஒழுக்கநெறிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. மாநில அரசின் திட்டத்தில் மதிய உணவு, முட்டை உள்ளிட்டவையும், மத்திய அரசின் சார்பில் இணை உணவு எனப்படும் சத்துமாவு போன்றவையும் வழங்கப்படுகின்றன.காலை, 9:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை பாதுகாப்பான சூழலில் குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். ஆனால், பெற்றோர் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

வருகையை ஊக்குவிக்க வாரம் 3 முட்டைகள்

அங்கன்வாடி மையங்கள் சார்பில் அதன் எல்லைக்குட்பட்ட 1 முதல், 2 வயதுள்ள குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு, வாரம் 3 முட்டை வழங்கப்படுகிறது. பெற்றோர், அங்கன்வாடி மையங்களுக்கு தங்கள் குழந்தைகளை துாக்கிச் சென்று, பழக்கப்படுத்தும் போது, 2 வயது நிரம்பியவுடன் அக்குழந்தைகள் எளிதாக அங்கன்வாடிகளுக்கு சென்று, விடுவர். இந்த வாய்ப்பை, பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே, அங்கன்வாடி பணியாளர்களின் எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ