அடிப்படை வசதி கோரி மலைவாழ் மக்கள் போராட்டம்; பேச்சுவார்த்தையில் வழி கிடைத்தது
உடுமலை; உடுமலையில், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, மலைவாழ் மக்கள் மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்தில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.இங்கு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட, கர்ப்பிணிகள், முதியவர்கள் ,குழந்தைகள் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களை, கரடு, முரடான மலைப்பாதைகளில், தொட்டில் கட்டி துாக்கி வரும் அவல நிலை உள்ளது.உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், தொடர் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு, 2006 வன உரிமைச்சட்டப்படி, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.2013ம் ஆண்டு, அடிப்படை வசதி கோரி மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், பல நாட்கள் தொடர்ந்த காத்திருப்பு போராட்டத்தின் முடிவில், அடிப்படை தேவையான ரோடு, குடிநீர், வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என, அரசு உறுதியளித்தது.தொடர்ந்து, திருமூர்த்திமலையிலிருந்து, குருமலை வரை, 4.5 கி.மீ., துாரத்தில், பாரம்பரியமாக மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வரும் வழித்தடத்தில், வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மண் பாதை அமைக்க, ரூ. 49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.மேலும், கொங்குரார் குட்டை முதல் ஈசல்திட்டு மலைக்கிராமத்திற்கும், மழை காலங்களில், தளிஞ்சி, தளிஞ்சி வயல் கிராமங்களுக்கு செல்லும் பாதையில், கூட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், பூச்சிக்கொட்டாம்பாறை, குழிப்பட்டி, மாவடப்பு, காட்டுப்பட்டி ஆகிய மலைக்கிராமங்களுக்கும், பாதை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது.ஆனால், நிதி ஒதுக்கிய திருமூர்த்திமலை - குருமலை வரையிலான பாதை அமைக்க, வனத்துறை அனுமதியளிக்கவில்லை.மருத்துவம், கல்வி, உணவு என அனைத்து தேவைகளுக்கும் அடிப்படையாக உள்ள பாதை வசதி வழங்காத, அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து, மீண்டும் நேற்று முதல், மாவட்ட வன அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.பல்வேறு மலைக்கிராமங்களிலிருந்து நுாற்றுக்கணக்கானவர்கள், உடுமலை மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கேயே, உணவு சமைத்தும், பாரம்பரிய இசைக்கருவிகளை ஒலித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை துவங்கிய போராட்டம், இரவு வரை நீடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.மலைவாழ் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குமார் தலைமையில், பேச்சுவார்த்தை நடந்தது.மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனா, வனச்சரக அலுவலர் மணிகண்டன், டி.எஸ்.பி., சுரேஷ்குமார், தாசில்தார் கவுரிசங்கர், மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச்செயலாளர் செல்வன், விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன், மா.கம்யூ.,மாவட்ட செயலாளர் மூர்த்தி. மாநில நிர்வாகிகள் காமராஜ், முத்துக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், திருமூர்த்திமலை முதல் குருமலை வரை, மலைவாழ் மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் வழித்தடத்தில், உடனடியாக, 6 மீட்டர் அகலத்தில் தீ தடுப்பு கோடுகள் அமைப்பது, 15 நாட்களுக்குள் அரசு அனுமதி பெற்று, அரசு ஒதுக்கிய நிதியில், பாதை அமைப்பது.மலைவாழ் மக்கள் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில், குருமலை-ஒலியலை அருவி வரையும், ஈசல் திட்டு மலைக்கிராமத்திற்கு பாதை வசதி, தளிஞ்சி, தளிஞ்சி வயல் செல்லும் வழித்தடத்தில் பழுதடைந்துள்ள கூட்டாறு பாலத்தை பராமரிப்பது ஆகிய பணிகள், மார்ச் மாதத்தில் மாநில அளவிலான உயிரின கமிட்டியில் நிறைவேற்றி, பணிகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.