உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சொத்து வரி விவகாரம் மீண்டும் பூதாகரமாகிறது

சொத்து வரி விவகாரம் மீண்டும் பூதாகரமாகிறது

திருப்பூர்; உள்ளாட்சி மானிய கோரிக்கையில், மாநகராட்சி சொத்து வரி உயர்வை குறைக்கும் அறிவிப்பு எதுவும் இல்லாததால், திருப்பூரில் மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்க, அ.தி.மு.க., தயாராகிவிட்டது.திருப்பூர் மாநகராட்சியில், 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. கடந்த, 2017 ல் குப்பை வரி விதிக்கப்பட்ட போது, கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, ஐந்து ஆண்டுகளுக்கு பின்தேதியிட்டு, குப்பை வரி செலுத்த வேண்டுமென, மாநகராட்சி நோட்டீஸ் கொடுக்கிறது. கடந்த, 2024ம் ஆண்டு ஆக., - செப்., மாதங்களில், மீண்டும் வரி உயர்த்தப்பட்டு, 'ஏ', 'பி', 'சி' என்று பிரித்து வரி நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு பிறகுதான், சொத்துவரி உயர்வின் பாதிப்புகளை மக்கள் உணரத்துவங்கினர். மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்ட போது, 2008ல் வரி கடுமையாக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, தற்போதைய வரி உயர்வு, கோவை மாநகராட்சியை காட்டிலும் அதிகமாக உள்ளது. அதாவது, வணிக வளாகங்களுக்கு, 100 சதவீதம், தொழில்களுக்கு, 150 சதவீதம் வரி உயர்வு செய்ததால், ஒட்டுமொத்த திருப்பூரும் பாதிக்கப்பட்டது. சொத்துவரி உயர்வு பெரும் சுமையாக இருப்பதாக அதிருப்தி பரவியது. பட்ஜெட் கூட்டத்தொடரில், உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை நாள் அல்லது, முதல்வரின் 110 விதிகளின் கீழ், திருப்பூர் மாநகராட்சி சொத்துவரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு வரும்' என்று, எம்.எல்.ஏ., - மேயர் ஆகியோர் உறுதி அளித்தனர். போராட்டம் கைவிடப்பட்டது. உள்ளாட்சித்துறை மானிய கோரிக்கையின் போது சொத்து வரி தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.வரும் 2026ல் சட்டசபை தேர்தல் வர இருப்பதால், சொத்துவரி உயர்வு பிரச்னையை பேசு பொருளாக மாற்ற வேண்டுமென, அ.தி.மு.க., களமிறங்க காத்திருக்கிறது. மே தின பொதுக்கூட்டத்திலேயே, முற்றுகை போராட்டம் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.,) கூறுகையில்,''தி.மு.க., ஆட்சியில், அபரிமிதமாக சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது; கோவை மாநகராட்சியை காட்டிலும் திருப்பூரில் வரி அதிகம் என மக்கள் கொந்தளித்துப்போயுள்ளனர். மானிய கோரிக்கையைில் வரி குறைக்கப்படும் என்று, மக்களை திசை திருப்ப முயற்சித்தனர். எவ்வித அறிவிப்பும் வரவில்லை. எனவே, அபரிமிதமான சொத்து வரி உயர்வை குறைக்கக்கோரி, அ.தி.மு.க., சார்பில், மக்களை திரட்டி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். கட்சி தலைமையில் இருந்து அதற்கான அறிவிப்பு வெளியாகும்,'' என்றார்.

மும்முறை உயர்ந்த

கட்டட உரிமச் சான்றுதிருப்பூர் மாநகராட்சியில், கட்டுமான பணிகளுக்கான, 'கட்டட உரிம சான்று' பெறுவதற்கான கட்டணம், 2022ல் உயர்த்தப்பட்டது. அடுத்ததாக, 2024ம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும், கடந்த பிப்., மாதம் மூன்றாவது முறையாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லையில், கட்டட உரிமை சான்று பெறும் கட்டணம், 1000 சதுர அடிக்கு, 23 ஆயிரம் ரூபாயாக இருந்தது; 1.25 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். *


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ