உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடலரசன் கோட்டையில் ஒலித்த சலங்கை

ஆடலரசன் கோட்டையில் ஒலித்த சலங்கை

ஆ டல் கலையே அற்புதமானது தான்; அதுவும், இறைவனால் உருவாக்கப்பட்ட பரதக்கலை என்பது, புனிதமிக்கது; பாரம்பரியம் நிறைந்தது. பரதக்கலையை அரங்கேற்றுவது, அதனை கற்றுத்தேர்ந்த கலைஞர்களுக்கு பெருமிதம், பூரிப்பு தரக்கூடிய ஒன்று. அதுவும், ஆடல் கலைகளின் அரசன் சிவபெருமான் குடிகொண்டிருக்கும், நாட்டிய நகரமான சிதம்பரம் நடராஜ பெருமான் சந்நதியிலேயே அரங்கேற்றுவது என்பது, இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் என்பதில் மிகையில்லை. கிடைப்பதற்கரிய இந்த வாய்ப்பை, அவிநாசி சலங்கை நிருத்யாலயா பரதநாட்டிய கலைக்கூட மாணவியர் பெற்றனர். கலைக்கூட ஆசிரியை தேவிகா தலைமையில், 31 மாணவியர், சிதம்பரம் சென்று, நடராஜ பெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்தி, ஆன்மிகத்தில் திளைத்தனர். புஷ்பாஞ்சலியில் துவங்கி, மிஸ்ர அலாரிப்பு, நடேச கவுத்துவம், கீர்த்தனை, பதம், சப்தம், திருவாசகம், தில்லானா என, 8 நடனமாடி, பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். நிகழ்ச்சியில், அண்ணாமலை பல்கலை ஓய்வு பெற்ற உதவி பேராசிரியர் கிருஷ்ணராஜ், நட்டுவாங்கம் புரிய, இணை பேராசிரியர் குமார் பாடினார். பேராசிரியர் கமலக்கண்ணன், மிருதங்கம் இசைத்தார். முத்துக்குமரன், வயலின்; ராஜேந்திரன், மோர்சிங் வாசித்தனர். மாணவியருடன் இணைந்து, சிவன் மேல் பாடப்பெற்ற கீர்த்தனைக்கு நடனமாடிய, சலங்கை நிருத்யாலயா ஆசிரியை தேவிகா வடிவேல் கூறியதாவது: ஆய கலைகள், அறுபத்து நான்கு என்பர். இதில், பரதநாட்டியக்கலை என்பது, பாரம்பரியமும், பண்பாடும் நிறைந்த ஒரு கலை. பிற கலைகள் அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது; ஆனால், பரதக்கலை என்பது, இறைவனால் உருவாக்கப்பட்டு, அவனால் ஆடப்பட்டது என்பது ஐதீகம். பரதக்கலை வளரவும், பண்பாடு வளரவும் இக்கலையை தொடர்ந்து வளர்த்தெடுத்து வருகிறோம்; மாணவிகளும் ஆர்வமுடன் பயின்று, அரங்கேற்றம் நிகழ்த்தி வருகின்றனர் இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சலங்கை நிருத்யாலயா பரத நாட்டியப்பள்ளி தாளாளர் வடிவேல், சிதம்பரம் நடராஜ பெருமான் கோவில் நிர்வாகத்தினருடன் இணைந்து செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ