பல்லடம்; பல்லடத்தில், மூச்சு முட்ட வைக்கும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்களின் அலறல் சத்தம் ஆட்சியாளர்களுக்கு கேட்காதது ஏன்? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல்லடத்தின் முக்கிய பிரச்னை என்றதும் அனைவருக்கும் நினைவு வருவது போக்குவரத்து நெரிசல் தான். தேசிய நெடுஞ்சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுக்க, இது போதாதென்று, திருப்பூர், மதுரை, அவிநாசி, பொள்ளாச்சி, கொச்சி என, அனைத்து மாநில நெடுஞ்சாலைகளில் இருந்தும், பல ஆயிரம் வாகனங்கள் நகரப் பகுதிக்குள் படையெடுத்து வருகின்றன. சாதாரண நாட்களிலேயே சமாளிக்க முடியாத நிலையில், திருமண முகூர்த்த நாட்கள் வந்து விட்டால், போலீசாருக்கு மூச்சு திணறிவிடும். கடந்த இரண்டு நாட்களும் முகூர்த்த நாள் என்பதால், பல்லடத்தில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பனப்பாளையம் முதல் அண்ணாநகர் வரை நிற்கும் வாகனங்கள் கடந்து சென்றால்தான், நகர பகுதிக்குள் இதர வாகனங்கள் நுழைய முடியும் என்ற நிலை உள்ளது. இச்சூழலில், திருச்சி ரோடு, சமத்துவபுரம் முதல், கோவை ரோடு பெரும்பாளி வரை, 5 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் இருந்து, ஆம்புலன்ஸ்களின் அலறல் சத்தம் கேட்க, எந்த வழித்தடத்தில் உள்ள சிக்னலை இயக்குவது என்று தெரியாமல் குழம்பினர். விமோசனம் இல்லை பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள், கடந்த, 2016ம் ஆண்டு முதல் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளது. காளிவேலம்பட்டி பிரிவு - மாதப்பூர் வரையிலான புறவழிச் சாலை திட்டம் இருதரப்பினரின் கருத்து வேறுபாடு காரணமாக, ஆய்வில் உள்ளது. கரூர் - கோவை பசுமைவழிச் சாலை, எந்த நிலையில் உள்ளது என்பதே தெரியாமல் கிடப்பில் உள்ளது. இவ்வாறு திட்டங்கள் கிடப்பில் இருக்க, ஆம்புலன்ஸ்களின் அலறல் சத்தம் ஆட்சியாளர்களுக்கு கேட்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், புறவழிச் சாலை திட்டங்கள் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வர, பனப்பாளையம் - அண்ணா நகர் வரை, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவாவது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கலாமே என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது குறித்து, மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், பல்லடம் மட்டுமல்ல, அருகிலுள்ள திருப்பூர், அவிநாசி வாழ் மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.