சாலையில் பனி மூட்டம்; குறையாத குளிரால் அவதி
திருப்பூர்; திருப்பூர் நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் காலை மற்றும் இரவில், குளிர் அதிகரித்துள்ளதால், வெம்மையாடைகளின் உதவியை மக்கள் நாடுகின்றனர்.டிச., முடிந்து ஜனவரி துவங்கிய போதிலும், குளிர் குறையவில்லை. பொதுவாக, மலை பிரதேசங்களில் மட்டுமே வாட்டி வதைக்கும் குளிர், இம்முறை வழக்கத்துக்கு மாறாக, திருப்பூர் நகரம் மற்றும் அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட ஊரக பகுதிகளிலும் அதிகளவில் தென்படுகிறது. காலை, 7:00 மணிக்கு கூட, சாலையில் பனிமூட்டம் படர்ந்திருப்பதால், முகப்பு விளக்கு வெளிச்சத்தில் டூவீலர் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், வாகனங்களை இயக்குகின்றனர்.குறிப்பாக, அதிகாலை துவங்கி, காலை, 7:00 மணி வரையில் கூட சாலைகளில் பனி மூட்டம் தென்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலை, 29 டிகிரி செல்சியஸ் முதல், 30 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம், 20 முதல், 21 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நிலவுகிறது.காலை நேர காற்றின் ஈரப்பதம், 79 சதவீதம்; மாலை நேர காற்றின் ஈரப்பதம், 55 சதவீதம் பதிவாகியுள்ளது என, வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. குளிர் அதிகம் நிலவுவதால் ஸ்வெட்டர், குல்லா உள்ளிட்ட வெம்மையாடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.