உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறப்பு வாய்ந்த மலை பீன்ஸ் மகசூல் பாதிப்பு; விலையும் சரிவால் வேதனை

சிறப்பு வாய்ந்த மலை பீன்ஸ் மகசூல் பாதிப்பு; விலையும் சரிவால் வேதனை

உடுமலை : உடுமலை அருகே, மலைப்பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படும், மலை பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் மகசூல் தொடர் மழையால் பாதித்துள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில், மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை உள்ளிட்ட, 15 மலைவாழ் மக்கள் கிராமங்கள் உள்ளன.இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலத்தில், சோயா பீன்ஸ், மலை பட்டர் பீன்ஸ் சாகுபடி செய்து வருகின்றனர். சிவப்பு நிற காய்களை கொண்டது சோயா பீன்ஸ் எனவும், வெள்ளை நிற காய்களை பட்டர் பீன்ஸ் எனவும் கூறுகின்றனர்.மலைப்பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படும் இவை, ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையிலேயே விளைவிக்கப்படுவதால், இவற்றுக்கு தனி சிறப்பு உள்ளது.தற்போது இப்பகுதிகளில், அறுவடை நடந்து வரும் நிலையில், அதிகரித்த மழைப்பொழிவு காரணமாக, செடிகள் பாதித்து, மகசூல் பெருமளவு குறைந்துள்ளது.வழக்கமாக, ஒரு ஏக்கருக்கு, 1,500 கிலோ வரை மகசூல் இருக்க வேண்டிய நிலையில், தற்போது, 180 முதல், 200 கிலோ மட்டுமே மகசூல் கிடைக்கிறது. இதனால், மலைவாழ் மக்கள் பாதித்துள்ளனர்.மலைவாழ் மக்கள் கூறியதாவது:மலைப்பகுதிகளில், ஐப்பசி பட்டத்தில், பீன்ஸ் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு சாகுபடியின் போதும், விதை எடுத்து வைத்து, அடுத்த முறை, உழவு செய்து, விதைப்பு செய்கிறோம்.கடந்த இரு மாதத்துக்கு முன் பெய்த தொடர் மழையால், செடிகள் பாதித்து, காய்கள் பிடிக்கவில்லை. வழக்கமாக, ஏக்கருக்கு, 30 கிலோ கொண்ட, 50 மூட்டை வரை மகசூல் இருக்கும். நடப்பு சீசனில், 6 மூட்டை மட்டுமே மகசூல் கிடைத்தது. இப்பகுதிகளில் விளையும் பீன்ஸ் மதுரை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கிலோ, 100 ரூபாய் வரை விற்று வந்த நிலையில், தற்போது, 35 ரூபாய் மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால், நடப்பு சீசனில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை