பல்லடம்:சின்னக்காளிபாளையம் கிராமத்தில், குப்பை விவகாரம் தொடர்பான மக்களின் போராட்டம் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நீடித்து வருகிறது.திருப்பூர் அருகே, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடுவாய், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதூர், இடுழம்பாளையம் மற்றும் வஞ்சிபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.முன்னதாக, அக். 24ம் தேதி முதல் போராட்டத்தை துவக்கிய பொதுமக்கள், காத்திருப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, முற்றுகைப் போராட்டம், சாலை மறியல், மாசாணி அம்மன் கோவிலில் மிளகாய் அரைத்து போராட்டம் என, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்காக, இரண்டு முறை பொதுமக்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும், போராட்டம் இன்னும் வீரியமடைந்துதான் வருகிறது. குறிப்பாக, ஆண்களைக் காட்டிலும், பெண்களை அதிகளவு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகம்கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் இது குறித்து கண்டுகொள்ளவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. கோர்ட் வழக்கு விசாரணை ஒருபுறம் நடந்து வந்தாலும், எக்காரணம் கொண்டும் குப்பை கொட்ட விடமாட்டோம் என்பதுதான், பெண்கள், பொதுமக்களின் ஒரே நோக்கமாக உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள், போலீசார் உட்பட, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்று ஆய்வு! நேற்று நடந்த ஐகோர்ட் விசாரணையை தொடர்ந்து, கோர்ட் உத்தரவின்படி, அதிகாரிகள் குழு, சின்னக்காளிபாளையத்தில் உள்ள மாநகராட்சி இடத்தில் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேலும், விசாரணை மீண்டும் நாளை (நவ. 28ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டது.