குப்பை கொட்டுவதை நிறுத்தும் வரை போராட்டம் ஓயாது!
தி ருப்பூர், மாநகராட்சியின் குப்பை கொட்டும் விவகாரத்துக்கு எதிராக மக்களின் போராட்டம் நீடிக்கும் என, போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈஸ்வரன், மாவட்ட தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்: இடுவாய் உட்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள நான்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், குப்பைகளை கொட்ட அடம் பிடித்து வருகிறது. விவசாயம், கால்நடை வளர்ப்பு, பி.ஏ.பி. பாசனம், குடியிருப்புகள், பூங்கா என, சுற்றிலும் உள்ள நிலையில், எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட துடித்து வருகிறது. தொழில் துறையினர், விவசாய சங்கங்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பல்வேறு தரப்பினரும், மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், எங்களது போராட்டத்துக்கு ஆதரவாகவும் கைகோர்த்துள்ளனர். பல கட்ட போராட்டம் நடத்தியும், தமிழக முதல்வரின் கவனத்துக்கு இப்பிரச்னை செல்லவில்லையா? மாவட்ட நிர்வாகமும் இதில் அமைதியாக உள்ளது ஏன்? எனவே, மாநகராட்சி நிர்வாகம், இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்டும் திட்டத்தை கைவிடும் வரை விவசாயிகள், பொதுமக்களின் போராட்டம் தொடரும். வேலவேந்தன், இடுவாய்: இடுவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் முழுமையான விவசாய பணி நடந்து வருகிறது. தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு, 80 சதவீதம் விளை பொருட்கள் இங்கிருந்து தான் செல்கின்றன. இப்படிப்பட்ட கிராமங்களை மாநகராட்சி நிர்வாகம் பாழ்படுத்த முயன்று வருவது வேதனையளிக்கிறது. எங்களது முன்னோர்கள்கல்விப் பணிக்காக தானமாக கொடுத்த நிலத்தில், குப்பைகள் கழிவுகளை கொட்டி, கிராமத்தையே அழிக்க நினைக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து, விவசாயமும் கால்நடை தொழிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். விவசாயத்தையும், கிராமத்தையும் அளிக்கும் எண்ணத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். செகமலையப்பன், சின்னக்காளிபாளையம்: திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை இங்கு கொண்டு வந்து கொட்டினால், கிராமத்தின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும். ஈக்கள், கொசுக்கள் பெருகி விடும். இப்படி, பசுமையான மரங்களை அழித்து குப்பை கிடங்கு இங்கு அமைக்க வேண்டியஅவசியம் என்ன? பல லட்சம் மக்கள் வசிக்கும் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நெகிழிப்பைகள் பெருகியதுதான் இதற்கு காரணம். நெகிழிப் பைகளை தடுக்க வேண்டியது மாநகராட்சியின் பொறுப்பு. இதற்கு கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். செல்வகுமார், இடுவாய்: ஊராட்சிகளில் சேரும் குப்பைகள் அந்தந்த ஊராட்சிப் பகுதிகளில் தான் தரம் பிரிக்கப்படுகின்றன. அதுபோல், மாநகராட்சி நிர்வாகமும், அதன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இதை செய்யாமல், கிராமங்களை அழிக்க நினைப்பது ஏன்? அதுவும், போலீசார் உறுதுணையுடன் பொதுமக்களை அடக்கி, அடிபணிய வைக்க நினைப்பது நியாயமல்ல. அறிவியல் ரீதியாக இதை கையாளாமல், கிராமம் கிராமமாக தேடிச் செல்வது சாத்தியமல்ல. எனவே, கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை கெடுத்து, குப்பைகள் கொட்ட நினைக்கும் எண்ணத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். ஒரு முடிவு வரும் வரை போராட்டம் நீடிக்கும்: கடந்த மாதம், 24ம் தேதி, சின்னக்காளிபாளையம் கிராமத்தில், குப்பை கொட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாநகராட்சியினர் தயார்படுத்த வந்தனர். அப்போதே நாங்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். அன்று முதல் எங்களின் போராட்டம் நீடித்துவருகிறது. ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, சட்டரீதியாகவும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து,உழவர் சந்தைக்கு விடுப்பு, மாநகராட்சி அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். இரண்டு முறை போலீசார் எங்களை கைது செய்தனர். இவ்வாறு, குப்பை கொட்டும் பிரச்னைக்கு எதிராக, எங்களின் தொடர்ச்சியான போராட்டம், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டும்நடவடிக்கையை கைவிடும் வரை எங்கள் போராட்டம் நீடிக்கும். -- போராட்டக் குழுவினர்.: