பல்லடம் அரசு பள்ளி ஆசிரியர் அணி அபாரம்
திருப்பூர்; திருப்பூரில் நடந்த முதல்வர் கோப்பை கபடி போட்டியில் ஏராளமான அணிகள் பங்கேற்று விளையாடின. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரி, மாற்றுத் திறனாளி, அரசு பணியாளர்கள், பொதுமக்கள் என, ஐந்து பிரிவுகளாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட அளவில் கபடி போட்டி நடந்தது. மாணவர் பிரிவில் 101 அணிகள், மாணவியர், 29 அணிகள், கல்லுாரி மாணவர், 25, மாணவியர், 11, அரசு ஊழியர்கள் ஆண்கள், ஐந்து, பெண்கள் பிரிவில், இரண்டு அணிகள் பங்கேற்றன. அரசு ஊழியர் பெண்கள் பிரிவில், பல்லடம் அரசு பள்ளி ஆசிரியர்கள் அணி வென்று முதலிடம், ஜெய்வாபாய் பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தது. பொதுபிரிவில், நான்கு அணிகள் பங்கேற்று விளையாடின. அரசு ஊழியர்களுக்கான ஆண்கள் பிரிவில், பத்து அணிகள் பங்கேற்றுவிளையாடியது. அதில், இறுதி போட்டியில், தாராபுரம் அரசு ஊழியர்கள் அணி, மின்வாரியம் உடுமலை அணியை வென்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், அமெச்சூர் கபடி மாநில செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், சேர்மன் முருகேசன், துணை மேயர் பாலசுப்ரமணியம், மாவட்ட தலைவர் மனோகரன், சர்வதேச நடுவர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.