இன்னல் தரும் இடுவாய் ரோடு
திருப்பூர்; இடுவாய் செல்லும் ரோடு, அமைக்கும் பணி தாமதமாவதால் பல தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடுவம்பாளையம் முதல் இடுவாய் செல்லும் ரோடு அமைந்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் அமைந்துள்ள இந்த ரோடு பல்வேறு முக்கிய பகுதிகளைக் கடந்து செல்கிறது.திருப்பூரை ஒட்டி அமைந்துள்ள பகுதி என்பதால், ஏராளமான வளர்ந்து வரும் குடியிருப்புகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் ஆகியன இந்த ரோட்டில் உள்ளன. இதனால், இந்த ரோடு அதிகளவிலான வாகனங்கள் பயன்படுத்தும் முக்கியமான ரோடாக உள்ளது.நீண்ட காலம் முன் போடப்பட்ட இந்த ரோடு பெருமளவு சேதமடைந்து வாகனப் போக்குவரத்துக்கு பெரும் அவதி நிலவியது. இதையடுத்து இந்த ரோட்டை புதிய ரோடாக மாற்றிமைக்க திட்டமிட்டு பணி துவங்கியது. இதற்காக முன் இருந்த பழைய ரோட்டை தோண்டியெடுத்து பணி துவங்கப்பட்டது. அதன் பின், புதிய ரோடு அமைக்க ஜல்லிக் கற்கள் கொண்டு வந்து கொட்டி பரப்பி விட்டனர்.ஜல்லிக் கற்கள் கொட்டிப் பரப்பி பல நாட்களாகியும் மேற்கொண்டு ரோடு போடும் பணி தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமமும் அவதியும் நிலவுகிறது. ரோட்டில் ெகாட்டிக் கிடக்கும் ஜல்லிக்கற்கள் மீது வாகனங்கள் செல்லும் போது பழுது ஏற்படுவதும் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவதும் தொடர்கதையாக உள்ளது.ரோடு போடும் பணியை விரைந்து முடித்து இந்த அவதிக்கு தீர்வு காண வேண்டும்.