சுவர் இடிந்து விழுந்து 4 பேருக்கு படுகாயம்
திருப்பூர்; திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனத்த மழையால், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிலிருந்த நான்கு பேர் காயமடைந்தனர்.திருப்பூர், காங்கயம் ரோட்டில் உள்ள, காங்கயம்பாளையம்புதுார், ஏ.டி., காலனியைச் சேர்ந்தவர் குமார், 35. பனியன் நிறுவன தொழிலாளி. அவர் மனைவி சசிகலா, 30. தம்பதியின் மகன் கிேஷார், 13 மற்றும் மகள் கீர்த்தனா, 11 ஆகியோர் உடன் வசிக்கிறார்.நேற்று முன்தினம் தீபாவளியை கொண்டாடி விட்டு இரவு அனைவரும் துாங்கச் சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு முதல் திருப்பூர் பகுதியில் கனத்த மழை பெய்த வண்ணம் இருந்தது. காலை 6:00 மணியளவில், குமார் வீட்டின் ஒரு பக்கம் இருந்த மண் சுவர் விழுந்தது. இதனால், வீட்டில் இருந்த நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்களின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, இடிபாடுகளில் சிக்கிக் ெகாண்டவர்களை மீட்டு, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவ சிகிச்சைக்குப் பின் குமார் வீடு திரும்பினார். மற்ற மூன்று பேரும் சிகிச்சை பெறுகின்றனர். தெற்கு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.