சாலையில் சிதறிய குப்பைகள் அகற்றுவதற்குள் பெரும்பாடு
பல்லடம்: இரண்டு நாட்கள் முன், கோவை, போத்தனுாரில் இருந்து குப்பைகள் ஏற்றியபடி, கன்டெய்னர் லாரி ஒன்று திருச்சி டால்மியாபுரம் நோக்கி சென்றது. பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, நடுரோட்டில் கவிழ்ந்தது. லாரியில் இருந்த குப்பைகள் அனைத்தும் ரோட்டில் சிதறி விழுந்தன. இதனால், இரண்டு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழை பெய்து கொண்டிருக்க, அகழ் இயந்திரங்கள் உதவியுடன், போலீசார், குப்பைகளை அகற்றி ரோட்டோரத்தில் கொட்டினர். கிரேன் பயன்படுத்தி கன்டெய்னர் லாரியும் அகற்றப்பட்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது. நேற்று, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு, ரோட்டோரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு, லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது. மழையால் குப்பைகள் அனைத்தும் நனைந்திருந்த நிலையில், கழிவுநீரை ரோட்டில் சிந்தியபடியே குப்பைகளுடன் லாரி புறப்பட்டது.