பட்டா இருக்கு: இடம் எங்கிருக்கு முகாமில் கிராம மக்கள் புகார்
- நமது நிருபர் -திருப்பூர் மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். சோழமாதேவி கிராம மக்கள்: மடத்துக்குளம் தாலுகா, சோழமாதேவி கிராமத்தில், 26 குடும்பங்களுக்கு, பட்டா வழங்கி எட்டு ஆண்டுகளாகிறது; இன்னும், யார் யாருக்கு எந்த இடம் என அளந்துகொடுக்கவில்லை. எங்கள் இடத்தை அளந்து கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும். பணிகள் முடக்கம் துங்காவி பகுதி மக்கள்: மடத்துக்குளம் தாலுகா, துங்காவி கிராமம், உடையார்பாளையத்தில், கள்ளி மேடு பகுதியில், கடந்த 1997ல், 80 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அப்பகுதியில் எந்த அடிப்படை வசதியும் செய்துதராததால், பட்டா இடத்தில் குடியேற முடியாமல் உள்ளோம். முந்தைய கலெக்டர் கிறிஸ்துராஜ், எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டார். குடிநீர் வசதிக்காக குழிகள் எடுக்கப்பட்டன. தற்போது அப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. புதிய கலெக்டர் பணிகளை வேகப்படுத்தி, அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும்.