உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இருக்கு... ஆனா பயன்பாட்டில் இல்லை!

இருக்கு... ஆனா பயன்பாட்டில் இல்லை!

உடுமலை நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில், 300க்கும் மேற்பட்ட வீட்டு மனைகளில், 120க்கும் மேற்பட்ட பூங்கா, பொது ஒதுக்கீடு நிலம் மற்றும் திறவிடம் என விதிமுறைகளின்படி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக பொது ஒதுக்கீடு இடம் ஒப்படைக்காதது மற்றும் ஒப்படைத்த நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட காரணங்களால், பொது ஒதுக்கீடு நிலங்கள் படிப்படியாக மாயமாகி வருகின்றன.சில ஆண்டுகளுக்கு முன், 55 பூங்கா இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு நகராட்சி சார்பில், தகவல் பலகை வைக்கப்பட்டது. சில இடங்களில் மட்டும் கம்பி வேலி அமைக்கப்பட்டது. சிறப்பு நிதி திட்டத்தில், சில பூங்காவில், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாலும், குறுகிய காலம் மட்டுமே நடைமுறையில் இருந்தது. தற்போது நகரில் எந்த பூங்காவையும் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. சில பூங்கா இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், 11 பூங்காக்களில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்னை, நகருக்குள் வலம் வரும் நகராட்சி அதிகாரிகள் கண்ணில் தென்படாததும், காதுகளை எட்டாததும், ஆச்சரியப்படுத்துகிறது.

கிராம பூங்காக்கள்

உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளுக்குட்பட்ட 'ரிசர்வ் சைட்கள்' 372 உள்ளன. ஆனால் கிராம ஊராட்சிகளில், பூங்காக்கள் அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்படுவதில்லை.போடிபட்டி, பெரியகோட்டை ஊராட்சிகளில் மட்டுமே 'அம்மா' உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பூங்காக்கள் உள்ளன. பெரியகோட்டை பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. மற்ற ஊராட்சிகளில், பொதுஇடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அப்பகுதிகளில் விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கு ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.ஒரு சில கிராமங்களில், பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பூங்கா தளவாடங்கள் மிகவும் பழுதடைந்தும், துருப்பிடித்த நிலையில் இருக்கின்றன. கிராமங்களில் விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு ஒன்றிய நிர்வாகங்கள் முக்கியத்துவம் அளிக்காமல் உள்ளன.

நிதி வழங்கவில்லை

ஊராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'கிராம ஊராட்சிகளில், விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு முன் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அதுவும் குறிப்பிட்ட ஊராட்சிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது விளையாட்டு சாதனங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. பூங்கா அமைப்பதற்கென தனியாக அரசின் சார்பில் நிதி வழங்கப்படுவதில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !