மாங்காய்க்கு விலை இல்லை; பெண் விவசாயி கண்ணீர்
விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் பங்கேற்ற தாராபுரம் தாலுகா, சங்கராண்டாம்பாளையத்தை சேர்ந்த பெண் விவசாயி வஞ்சிக்கொடி என்பவர், கலெக்டர் மனீஷ் நாரணவரேயிடம் மாம்பழங்களை கொடுத்து, இயற்கை விவசாயத்தில் விளைவித்த மாங்காய்க்கு விலையில்லை; அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கண்ணீர்மல்க தெரிவித்தார்.வஞ்சிக்கொடி கூறியதாவது:எட்டு ஏக்கர் பரப்பளவில், இயற்கை விவசாயத்தில், கிளி மூக்கு, நீலம் உள்ளிட்ட மா மரங்கள் பயிரிட்டுள்ளோம். ஒரு கிலோ, 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் மாங்காய், தற்போது, 25 ரூபாய்க்கு விற்கிறது. குறைவான விலைக்கு விற்றாலும்கூட, சந்தையில் மாங்காய் வாங்கவும் ஆளில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மாங்காய் விலை சரிவுக்கான காரணம் என்ன; மக்கள் ஏன் வாங்க தயங்குகின்றனர் என்பது குறித்து சரியான காரணங்கள் தெரியவில்லை. பறிப்புக் கூலி, சந்தைக்கு கொண்டுவருவதற்கான போக்குவரத்து செலவினம் கூட கட்டுப்படியாகாததால், மாங்காயை பறிக்காமல் அப்படியே விட்டுவிட்டோம். பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகிறோம்.தமிழக அரசு, அரிசி கொள்முதல் செய்வதுபோல், இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் மாங்காயையும் கொள்முதல் செய்யவேண்டும். எங்களைப்போன்று பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, மனு அளித்துள்ளேன்.