ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளை பொருளுக்கு பாதுகாப்பு இல்லை
அவிநாசி: அவிநாசி வட்டம் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டி ரோட்டில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 50000, ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கும் உள்ளது. இதில் நிலக்கடலை மூட்டையை இருப்பு வைத்து ஏலத்தில் விற்பனை செய்வதற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.நிலக்கடலையின் விளைச்சல் வரத்தைப் பொறுத்து, மூட்டைகள் அதிக அளவில் வருவதுண்டு.ஒழுங்குமுறை விற்பனை கூட பிரதான நுழைவாயிலில் உள்ள இரும்பு கதவு பெயர்ந்து விழுந்து பல மாதங்களாக சரி செய்யப்படாமல் உள்ளது.கிடங்கில் பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் விவசாய விளைபொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு உரிய காவலாளி வசதியும் இல்லாததால் இரவு நேரங்களில் கிடங்கில் உள்ள பொருட்கள் திருட்டுப் போகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் விரைவில் ஒழுங்குமுறை விற்பனை கூட பிரதான நுழைவாயிலில் உள்ள இரும்பு கதவை சீரமைத்து தந்து, விவசாயிகளின் விளை பொருட்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பு வைத்து விற்பனைக்கூடம் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுத்து தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் கேட்டபோது, ''இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.விரைவில் கதவை சரி செய்வதற்கான பணிகள் நடைபெறும்'' என்றார்.