உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் பரிசோதனை செய்ய வந்தனர்; பொதுமக்கள் எதிர்ப்பால் சென்றனர்

மண் பரிசோதனை செய்ய வந்தனர்; பொதுமக்கள் எதிர்ப்பால் சென்றனர்

பல்லடம்; பல்லடம் அருகே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மண் பரிசோதனை செய்ய வந்த நகராட்சி அதிகாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம் புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட, ஆலுாத்துப்பாளையம் கிராமத்தில், பல்லடம் நகராட்சியின் கழிவு நீரை சுத்திகரித்து, சேகரித்து வைப்பதற்கான சேமிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, நேற்று நகராட்சி அதிகாரிகள் அகழ் இயந்திரத்துடன் வந்தனர். தகவல் அறிந்த இப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து விரைந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுமக்கள் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் அகழ் இயந்திரத்துடன், பரிசோதனை செய்யாமல் திரும்பிச் சென்றனர். அப்பகுதியினர் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம், கழிவு நீரை சுத்திகரிக்க பல்லடத்தில் இடம் பார்க்காமல், கிராமப் பகுதிக்கு ஏன் வந்தீர்கள்? தாராபுரம் ரோட்டில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குப்பை கிடங்கே முறையாக செயல்படுவதில்லை. இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், அதுவும் அப்படித்தான் இருக்கும். இப்பகுதியில் குடிநீர் பிரச்னை பல மாதங்களாக உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என, ஏற்கனவே கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆகியோரிடமும் மனு கொடுத்துள்ளோம். எத்தனையோ மக்கள் வீட்டுமனை இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ரோடு, தண்ணீர், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதையெல்லாம் செய்யாமல், கழிவு நீரை மட்டும் ஏன் இங்கு கொண்டு வருகிறீர்கள். இங்குள்ளவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ