பல்லடம்: ''போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் புடவையை உருவினர்; பூட்ஸ் காலால் மிதித்தனர்; கை கால்களை முறித்தனர்'' என்று சின்னக்காளிபாளையத்தில், மாநகராட்சி குப்பைகளுக்கு எதிராகப் போராட்டத்தில் போலீசார் அராஜகமாக நடந்துகொண்டதாக பெண்கள் கண்ணீர்மல்கக் கூறினர். திருப்பூர் அருகே, இடுவாய், சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சியின் குப்பைகள் கொட்டும் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐகோர்ட் உத்தரவின்படி, நேற்று முன்தினம், குப்பைகளுடன் வந்த மாநகராட்சி லாரிகளை, பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு, மோதல் காரணமாக, பொதுமக்கள் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேயர் துரோகம்
கவிதா: குழந்தைகள், குடும்பத்தின் மீது சத்தியமாக குப்பை கொட்டப்படாது என, மேயர் உறுதியளித்ததால், ஊர் பெரியவர்கள் பலரும், பகிரங்கமாக அவரிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால், மேயர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு, எந்த பாவமும் செய்யாத அப்பாவி மக்களை, குற்றவாளிகளைப் போல் இழுத்துச் சென்றதுடன், கை, கால் மற்றும் மண்டையை உடைத்துள்ளனர். ஊரைக் காக்க நினைத்த எங்களை குற்றவாளிகள் நினைக்கின்றனர். எனது கணவரும் கைது செய்யப்பட்டதால், தற்போது, குழந்தையை வைத்துக்கொண்டு தனியாக சிரமப்பட்டு வருகிறேன். கை - கால் முறிப்பு
சரண்யா: தரம் பிரித்து முறையாக குப்பைகளை கொண்டு வர வேண்டும் என்றுதான் ஐகோர்ட் அறிவுறுத்தியது. ஆனால், அதை பின்பற்றாமல் குப்பைகள் எடுத்து வந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அதைப்பற்றியெல்லாம் நீங்கள் பேச வேண்டாம் என்று கூறி, நான்கு போலீசாரை வைத்து என்னை வேனில் ஏற்றி கைது செய்தனர். கேள்வி கேட்பவர்களை குண்டுக்கட்டாக தூக்கி எடுத்துச் செல்வது மட்டுமே போலீசாருக்கு தெரியும். தவறே செய்யாதவர்கள் மீது போலீசார் பொய்யான வழக்கு பதிந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் புடவையை உருவியும், பூட்ஸ் காலால் மிதித்தும், கைகால்களை முறித்தும் மிகக் கொடூரமாக போலீசார் நடந்துள்ளனர். ஆனால், நாங்கள் கம்பியால், கட்டையால் அடித்ததாக அப்பட்டமான பொய்யுடன் வழக்கு பதிந்துள்ளனர்.குறிவைத்து தாக்குதல்
குமாரி: போராட்டத்தின்போது யாரெல்லாம் எதிர்த்து கேள்வி எழுப்பினார்களோ, அவர்களையெல்லாம் குறி வைத்து வேண்டுமென்றே போலீசார் கைது செய்தனர். அதுவும், வயதானவர்கள், பெண்கள் என்றும் பார்க்காமல், தாறுமாறாக இழுத்துச் சென்றனர். இதனால், சிலர் காயமடைந்ததுடன், பெண்கள், தாய்மார்கள் பலர் இன்னும் உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறோம். குப்பைக்கு எதிராக போராடியது மற்றும் எதிர்த்து கேள்வி எழுப்பினால், போலீசார் இப்படித்தான் அநாகரிகமாக நடந்து கொள்வார்களா? ஊரை இப்படி பாழ்படுத்துகிறீர்களே என்று கேள்வி எழுப்பியது குற்றமா? ஊர் பெரியவர்கள் மன்னிப்பு கேட்ட பின்னும் இப்படி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது.அரசியல் செய்யவில்லை
ராசம்மாள்: ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் இங்கு விவசாயம் நடந்து வருகிறது. வெறும் ஏழு ஏக்கர் நிலத்தில் குப்பை கொட்டி, ஆயிரக்கணக்கான விவசாய நிலத்தை பாழ்படுத்த வேண்டாம் என்ற எண்ணத்துடன் தான் நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம். மற்றபடி எங்களுக்கு எந்த மறைமுக நோக்கமும் கிடையாது. எங்கள் போராட்டம் மூலம் அரசியலெல்லாம் செய்யவில்லை. வரமாக உங்களிடம் கேட்கிறோம். தயவு செய்து இங்கு குப்பை கொட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
போலீஸ் நடத்திய நாடகம்
போலீஸ் தாக்குதல் குறித்து சின்னக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: கார்த்தி: குப்பை கொட்ட வந்த லாரிகளை தடுத்து நிறுத்திய எங்களிடம் போலீசார் வேண்டுமென்றே மோதல், தள்ளுமுள்ளு ஏற்படுத்தி, தற்போது, 15 பேர் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் போலீஸ் ஒருவர் காயமடைந்ததாக நாடகம் நடத்திய போலீசார், வேண்டுமென்றே அவரை தரையில் படுக்க வைத்து விட்டு, ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்றது போல் நாடகமாடியதை கண்கூடாக பார்த்தேன். விவசாயத்தையும், மண்ணையும் நீரையும் காக்கவே, இத்தனை நாட்களாக போராடுகிறோம். பெண்கள், தாய்மார்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிவிட்டு, நாங்கள் அவர்களை தாக்கியது போன்று மடை மாற்றம் செய்யும் வேலையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். பழனிசாமி: ஆரம்பம் முதலே அறவழியில் தான் நாங்கள் போராடி வருகிறோம். அவ்வாறு, நேற்று முன்தினமும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எங்களை தாறுமாறாக இழுத்துச் சென்று, கை, கால், மண்டைகளை உடைத்தும், போலீசார்தான் அராஜகத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் கைது செய்து இரவு, 9.00 மணி வரை மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர். குப்பைகளை கொட்டி கிராமத்தை அழிக்க தீர்மானித்துவிட்டனர்.