உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிந்தியுங்கள், மக்களே! பிளாஸ்டிக் கழிவுகளை வீசி சாக்கடையை அடைக்காதீர்

சிந்தியுங்கள், மக்களே! பிளாஸ்டிக் கழிவுகளை வீசி சாக்கடையை அடைக்காதீர்

திருப்பூர்; திருப்பூர் பாத்திமா நகரில் உள்ள சரண் தியேட்டர் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் தொடர்ந்து அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் தேங்கி நிற்பதாக மக்கள் மத்தியில் புகார் எழுந்தது. மழைக் காலங்களில் கழிவு நீர் ரோட்டில் சென்று, மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். அடைப்பை நீக்கும் வாகனம் மூலம் கழிவுநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். கால்வாயில் இருந்து அடைப்பை சரி செய்யும் பணியின் போது, சாக்கடை கால்வாயில் இருந்து மக்கள் துாக்கி வீசப்பட்ட குளிர்பானம், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள், தெர்மா கோல் என ஏராளமானவை இருந்தன. இதுபோன்று, நகர் முழுவதும் உள்ள நிலைமையை யோசித்தால் அதிர்ச்சி ஏற்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நடுவதுடன் நமது கடமை முடிவதில்லை. மக்காத பிளாஸ்டிக் பை, குளிர்பான மற்றும் வாட்டர் பாட்டில்கள் போன்ற பிளாஸ்டிக்கை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இந்த பாட்டில்கள் மண்ணுக்கு கேடு விளைவிக்க கூடியது. இதுபோன்ற கழிவுகளை ரோட்டில் வீசி செல்லும் போது, அவை சாக்கடை அல்லது மழை நீர் கால்வாயில் தேங்கி நின்று, நீர் செல்லும் பாதையை அடைத்து விடும். குறிப்பாக, மழைக்காலங்களில் கால்வாயில் மழைநீர் செல்ல முடியாமல் ரோட்டில் கழிவு நீர் செல்லும். தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாவதுடன் சுகாதார கேடு ஏற்படுகிறது. இறுதியில் பாதிக்கப்படுவது மக்களும், கால்நடைகளும் தான். மக்காத குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், இவ்விஷயத்தில் அலட்சியமாக இருந்து வருவது வேதனையளிக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

பொதுமக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன், பொது வெளியில் மக்காத கழிவுகளை துாக்கி வீசாமல், முறைப்படி துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மக்காத கழிவுகளுக்குரிய இடத்தில் அதை போடலாம். முடிந்தவரை, ஒருமுறை பயன்படுத்தப்படும் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது, சுற்றுச்சூழலை காக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை