உடுமலை:உடுமலை - திருப்பூர் வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படாததால், நீண்ட தொலைவுக்கு தொங்கியபடி பயணிக்கும் அவல நிலை தொடர்கிறது.உடுமலை - திருப்பூர் வழித்தடத்தில், பல்லடம் நகரம் மற்றும் 50க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன. பின்னலாடை, நுாற்பாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு, கிராமங்களில் இருந்து நாள்தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் திருப்பூர், பல்லடத்துக்கு பயணிக்கின்றனர்.இவ்வழித்தடத்தில், பல்லடம் வரையுள்ள கிராமங்களுக்கு டவுன் பஸ் வசதியும் குறைவாகவே உள்ளது. இடைபட்ட பகுதியிலுள்ள, அரசுப்பள்ளிகளுக்கு செல்லும், மாணவ, மாணவியரும், திருப்பூர் பஸ்களிலேயே பயணிக்க வேண்டியுள்ளது. மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு சார்ந்த பணிகளுக்கு, பொதுமக்களும், அலுவலர்களும் திருப்பூருக்கு செல்கின்றனர். இவ்வாறு, தொழில், கல்வி, நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாக இருப்பதால், உடுமலை - திருப்பூர் ரோடு மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், தேவையான அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை.தொடர் கோரிக்கை அடிப்படையில், உடுமலையில் இருந்து, 'பாயின்ட் டூ பாயின்ட்' பஸ்கள் திருப்பூருக்கு இயக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பல்லடம் ஆகிய இடங்களில் மட்டும் இப்பஸ்கள் நிறுத்தப்படும்.இதனால், திருப்பூர் செல்பவர்கள் பயன்பெற்றாலும், வழித்தட கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு பலன் கிடைக்கவில்லை.பயணியர் கூறுகையில், 'காலை, மாலை நேரங்களில், திருப்பூருக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், மிகுந்த சிரமப்படுகிறோம். நீண்ட தொலைவுக்கு தொங்கியபடியே பயணிக்க வேண்டியுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள், வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில், கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வழித்தடத்தில், கூடுதல் டவுன் பஸ்களை இயக்காவது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.