இன்று மாலை சூரசம்ஹாரம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமான் கோவில்களில், சூரசம்ஹாரம் இன்று கோலாகலமாக நடக்கிறது. கந்தசஷ்டி விழா, கடந்த, 22ம் தேதி விமரிசையாக துவங்கியது. ஐந்தாவது நாளான நேற்று, கோவில்களில் முருகப்பெருமானுக்கு மஹா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜைகள் நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், இளம் சிவப்பு மலர்களால், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரபூஜைகள் நடந்தது. இன்று, தேர்வீதிகளில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், விநாயகர் கோவிலில் இருந்து, 108 பால்குட ஊர்வலம் காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, முருகருக்கு மஹா அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜையும், மாலை, 6:00 மணிக்கு அன்னை விசாலாட்சியிடம், சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது. திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சுப்பிரமணியர், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் உட்பட கோவில்களில் இன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்னையிடம் சக்திவேல் வாங்கும் முருகப்பெருமான், தளபதி வீர பாகுடன் சென்று, சூரனை வதம் செய்கிறார். நாளை, ஸ்ரீவள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவமும், தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் உட்பட அனைவருக்கும் விருந்து வைபவமும் நடைபெற உள்ளது.