மூவர் படுகொலை; 9 தனிப்படை அமைப்பு குற்றவாளியை கண்டறிய போலீசார் திணறல்
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், பொங்கலுார், சேமலைகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 78. இவரது மனைவி அலமேலு, 75. தம்பதி தோட்டத்து வீட்டில் தங்கி விவசாயம் செய்து வந்தனர். தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். மகள் திருமணமாகி சென்னிமலையிலும், மகன் செந்தில்குமார், 46, கோவையில் குடும்பத்துடன் தங்கி ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.28ம் தேதி உறவினர் வீட்டு விசேஷத்துக்கு செல்ல செந்தில்குமார், பல்லடத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அன்றிரவு, மூவரும் துாங்கி கொண்டிருந்த நிலையில், 29ம் தேதி அதிகாலை, வீட்டுக்கு வெளியே தந்தை தெய்வசிகாமணியும், வீட்டுக்குள் தாய் அலமேலு, மகன் செந்தில்குமார் ஆகியோர் கொடூரமாக தாக்கப்பட்டனர். இருவர், இறந்த நிலையில், தந்தை மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். மூவரும் கொடூரமாக தாக்கப்பட்டு நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.கொலை நடந்த இடத்தை, மேற்கு மண்டல ஐ.ஜி., கோவை சரக டி.ஐ.ஜி., மாநகர கமிஷனர் மற்றும் எஸ்.பி., உள்ளிட்டோர் பார்வையிட்டு, கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.போலீசார் கூறியதாவது:கொள்ளையடிக்க நடந்த கொலைகளா அல்லது முன்விரோதம் காரணமா என, பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. முதல் கட்டமாக, ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையை துவங்கிய நிலையில், தற்போது, கூடுதலாக நான்கு தனிப்படை என, மொத்தம், ஒன்பது தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.இரு வாரம் முன், தோட்டத்தில் வேலை செய்து நிறுத்தப்பட்ட நபர் மீது சந்தேகப்பட்டு, அவரை பிடித்து விசாரித்து வருகிறோம். சுற்று வட்டாரத்தில் உள்ள 'சிசிடிவி' பதிவு, அன்றிரவு அந்த இடத்தில் பதிவான மொபைல் போன் சிக்னல்கள், வாகனம், ஆட்கள் நடமாட்டம் என, ஒவ்வொரு வகையில் தகவல்களை திரட்டி விசாரிக்கிறோம். கொலையில் ஈடுபட்டவர்கள், வெளி நபர்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோன்று படுகொலையில் ஈடுபடும் பழைய நபர்களின் தற்போதைய நிலை ஆகியவற்றை கண்காணித்து வருகிறோம். இதுவரை, சரியான தடயங்கள் கிடைக்கவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.