வார்டன் உட்பட மூவர் சிக்கினர்
திருப்பூர்; திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ --- மாணவியர் படிக்கின்றனர். பள்ளி விடுதியில் தங்கியுள்ள, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, விடுதி வார்டன் திருமங்கலத்தைச் சேர்ந்த சரண், 25, என்பவர் கடந்த சில மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். இரு நாட்களுக்கு முன், சைல்டுலைன் எண்ணான, '1098'க்கு அழைத்து வார்டனின் அத்துமீறல் குறித்து இரு மாணவர்கள் புகார் அளித்தனர்.சென்னையில் இருந்து வந்த அந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.வார்டன் சரண், மாணவர்களை தாக்கிய தலைமை வார்டன் ராம்பாபு, 34, பிரச்னையை அலட்சியமாகக் கையாண்ட பள்ளி தாளாளர் சுரேஷ்குமார், 52, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.