தடகளப் போட்டியில் பதக்கம் குவித்த திருப்பூர் வீரர்கள்
திருப்பூர்; தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில், கடந்த, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை தடகள மைதானத்தில், 39வது தமிழ்நாடு அளவிலான மாவட்டங்களுக்கு இடை யேயான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 34 மாவட்டங்களில் இருந்து, 4,000க்கும் மேற்பட்டோர், 148 வகையான போட்டிகளில் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில், 190க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். புதிய சாதனை
இதில், 16 வயது பிரிவு, 80 மீ., தடை தாண்டுதல் போட்டியில், வர்ஷிகா; பென்ட்லதான் போட்டியில், பிரேமா; 400 மீ., தடை தாண்டுதல் போட்டியில் விஷ்ணுஸ்ரீ ஆகியோர் தங்கம் வென்றதுடன், புதிய சாதனை பதிவு செய்தனர். மேலும், 16 வயது பிரிவு, மெட்லி ரிலே ஓட்டத்தில் வர்ஷிகா, பிரேமா, ரித்திகா, சாருஹாசினி ஆகியோர் தங்கம் வென்றனர். 14 வயது பிரிவு, டிரையத்லான் ஓட்டத்தில், ஆதர்ஷ்; 16 வயது பிரிவு, 60 மீ., ஓட்டத்தில் தருண்; 20 வயது பிரிவு, 3,000 மீ., ஓட்டத்தில் பிரகாஷ்; மும்முறை தடை தாண்டும் ஓட்டத்தில் பவீனா ராஜேஷ் ஆகியோர் வெள்ளி வென்றனர். மேலும், 16 வயது பிரிவு நீளம் தாண்டுதலில், சஸ்வத்; 18 வயது பிரிவு குண்டெறிதல் போட்டியில், தியா சஞ்சு; 20 வயது பிரிவு, 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பிரயான்சுராஜ்; ெஹப்ட்தலான் போட்டியில் மேனகா; நீளம் தாண்டுதலில், பவீனா ராஜேஷ் ஆகியோர் வெண்கலம் வென்றனர். தேசிய போட்டிக்கு தகுதி
இதில், ஆதர்ஷ், தருண், பிரேமா, வர்ஷிகா, விஷ்ணுஸ்ரீ, பிரகாஷ், பவீனா ராஜேஷ் ஆகியோர், 40வது தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளனர்.இத்தகைய வெற்றியை சாத்தியமாக்கிய நம் மாவட்ட வீரர், வீராங்கனைகள், மாவட்ட அணியின் பயிற்சியாளர் சத்தியானந்த், மேலாளர்கள் லட்சுமணன், ராஜ்குமார், பல்வேறு கிளப்புகளின் பயிற்சியாளர்களுக்கு திருப்பூர் மாவட்ட தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.