திருப்பூர் குப்பை விவகாரம்; பா.ஜ.வினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; குப்பை விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவதாக கூறி, திருப்பூரில், 60 வார்டுகளிலும், பா.ஜ.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகரில் தினமும் 800 டன் குப்பைகள் குவிகின்றன. கொட்டுவதற்கு இடம் இல்லாததால், வார்டுகளிலேயே குப்பைகள் தேங்கியுள்ளன. உரிய திடக்கழிவு மேலாண்மை கடைபிடிக்கப்படவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மேயரை கண்டித்து, திருப்பூரில் உள்ள 60 வார்டுகளில், ஒவ்வொரு வார்டுதோறும் பா.ஜ.,வினர் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தை அறிந்து சில இடங்களில் குவிந்துள்ள குப்பையை, லாரிகள் மூலம் மாநகராட்சி நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர். திருப்பூர் லட்சுமி நகரில் ஈஸ்வரன் கோவில் அருகே மலை போல் குவிந்துள்ள குப்பை மேட்டில் பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாழை இலையை ரோட்டில் விரித்து, அதன் மேல் குப்பைகளை கொட்டி, இந்த நிலையில் தான் மக்கள் வசித்து வருவதாக தெரிவித்தனர்.