மேலும் செய்திகள்
பொதுத்தேர்வு ஆயத்தம்; பள்ளிகளில் ஆய்வு
27-Jan-2025
திருப்பூர் : பிளஸ் 2 பொதுத்தேர்வில் மீண்டும் முதலிடம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட கல்வித்துறை முடுக்கி விட்டுள்ளது.மார்ச் 3ல் பிளஸ் 2 தேர்வு துவங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில், 12, 034 மாணவர்கள் தேர்வை எதிர்கொள்கின்றனர். கடந்த 7 ம் தேதி துவங்கிய செய்முறைத்தேர்வு 15ம் தேதி வரை நடக்கிறது.மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராக செய்முறைத்தேர்வு முடிந்ததும், பத்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நாளில், தேர்வு அட்டவணைக்கு ஏற்ப, ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் மாணவ, மாணவியர் தேர்வுக்கு தயாராக வேண்டும். முக்கிய பாடங்களின் புத்தகங்களை தொடர்ந்து திரும்ப திரும்ப படிப்பதுடன், கடினமான பகுதிகளை எழுதி பார்த்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.தேர்வுக்கு முந்தைய நாள் வரை மாணவர் தேர்வுக்கு தயாராவது குறித்தும், எந்தெந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது என்பது குறித்தும் ஆசிரியர்கள் 'வாட்ஸ்ஆப்' வாயிலாக கண்காணிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.சி.இ.ஓ., பேட்டிமுதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் கூறியதாவது:கடந்த முறை பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற திருப்பூர், நடப்பாண்டும் முதலிடம் பெற வேண்டும் என்பதற்கான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்புதல் தேர்வுக்கு பின் மாணவ, மாணவியர் இரவு, பகலாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்; ஆசிரியர், தலைமை ஆசிரியர் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து, கல்வியின் பின்தங்கிய, குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தேர்வுக்கு இன்னமும் மூன்று வாரம் மட்டுமே உள்ளதால், வரும் நாட்கள் கடைசி கட்ட வாய்ப்பாக மாணவர்களுக்கு உள்ளது.எனவே, இருக்கும் நாட்களை கட்டாயம் உபயோகத்துடன் தேர்வுக்கு தயாராகும் நாட்களாக மாணவ, மாணவியர் மாற்ற வேண்டும். நம் மாவட்டம் பிளஸ் 2 தேர்ச்சியில் முதலிடம் பெற வேண்டும் என்ற பொறுப்புணர்ந்து மாணவர்களும் தேர்வை நிச்சயம் நல்ல முறையில் எதிர்கொள்வர் என நம்பிக்கை மாவட்ட கல்வித்துறைக்கு உள்ளது.இவ்வாறு, உதயகுமார் கூறினார்.
தலைமை ஆசிரியர்கள் கூறுகையில்,' தேர்வுக்கு இன்னமும் குறுகிய நாட்களே உள்ளன. இதுவரை அலட்சியமாக இருந்த மாணவ, மாணவியர் கூட இக்கால கட்டத்தில், பொறுப்புணர்ந்து படித்தால், நிச்சயம் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியும். தேர்வுகளுக்கு இடையேயும் போதிய இடைவெளி இருப்பதால், பயமின்றி தேர்வை எதிர்கொள்ளவும் முடியும். தங்கள் மகன், மகள் இருக்கும் குறைந்த பட்ச நாட்களில் சரிவர தேர்வுக்கு தயாராக அவர்களை கண்காணித்து பெற்றோரும் உதவினால், நிச்சயம், திருப்பூர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறுவது சாத்தியமாகும்,' என்றனர்.
27-Jan-2025