திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ரூ.40 ஆயிரம் கோடியை தாண்டும்
திருப்பூர்: ''திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடப்பு நிதியாண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும்'' என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் - ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் சக்திவேல் நம்பிக்கை தெரிவித்தார்.உலகளாவிய வர்த்தக சூழல்கள் சாதகமான நிலைக்கு திரும்பிவருவதையடுத்து, இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியின் பயணம் வளர்ச்சி நிலைக்கு திரும்பியுள்ளது. கடந்த மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், டாலரில் 11.45 சதவீதமும்; ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது, 15.67 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 2024, ஜனவரியில் 11,980.76 கோடி ரூபாய்க்கு நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், இந்தாண்டு ஜனவரியில், 13,857.86 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் சக்திவேல் கூறியதாவது:கடந்த நிதியாண்டின் ஏப்., - ஜன., வரையிலான பத்து மாதங்களில், 95 ஆயிரத்து 832 கோடி ரூபாயக்கு நடந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டின் இதே பத்து மாதங்களில், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 791 கோடி ரூபாயாக, 13.52 சதவீத வளர்ச்சியையும், டாலரில் கணக்கிடும்போது 12 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது.நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்த வளர்ச்சி, அடுத்தடுத்த மாதங்களில் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியை பொறுத்தவரை, ஏப்., முதல் ஜன., வரையிலான பத்து மாதங்களிலேயே, முந்தைய நிதியாண்டுக்கான மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தை கடந்துவிட்டது. நடப்பு நிதியாண்டுக்கான திருப்பூரின் மொத்த ஏற்றுமதி வர்த்தகம், 40 ஆயிரம் கோடி ரூபாயை கடந்து சென்றுவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
'நம்பகத்தன்மை மிக்கமையமாக திருப்பூர்'
'திருப்பூரை, ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கான நிலையான மற்றும் நம்பகத்தன்மை மிக்க மையமாக வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் கருதுகின்றனர். புதுடில்லியில் நடைபெற்ற 'பாரத் டெக்ஸ்' கண்காட்சியில் பங்கேற்றதன் வாயிலாக, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அதிகளவில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வளம் குன்றா வளர்ச்சியை திருப்பூர் முன்னெடுத்துச்செல்வது குறித்த தகவல்களை, உலகளாவிய வர்த்தகர்கள் மத்தியில் பரவச்செய்யவேண்டும். இதன் மூலம், வரும் மாதங்களில் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தலாம்' என்றார் சக்திவேல்.