பேரிடர் கால பாதுகாப்புக்கு கைகொடுக்கும் டிஎன் - அலர்ட் மொபைல் செயலி
திருப்பூர் : மழை, புயல், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர் குறித்த தகவல்கள், முன்னரே மக்களை சென்றடைய வசதியாக, 'டிஎன் - அலர்ட்' (TN -- ALERT) என்கிற மொபைல் போன் செயலியை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.வானிலை தகவல்கள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படுவதால், மிகச்சுலபமாக இந்த செயலியை பயன்படுத்தலாம். தமிழகத்தில் எந்த ஒரு பகுதியையும் தேர்வு செய்து, அந்த இடத்தின் தற்போதைய மழை நிலவரங்களை தெரிந்துகொள்ளலாம்.எந்தெந்த இடங்களில் மழை, இடியுடன் கூடிய மழை, மின்னல் எச்சரிக்கைகள் உள்ளன. அடுத்த நான்கு நாட்களுக்கான, மழை வாய்ப்பு, ஈரப்பதம், குறைந்த மற்றும் அதிகபட்ச வெப்பநிலைகளை உள்ளடக்கிய வானிலை முன்னறிவிப்புகள், சீரான இடைவெளியில் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகிறது.தினமும் காலை, மாவட்டந்தோறும், மழைமானி அமைந்துள்ள இடங்களில் பதிவான மழை அளவு பதிவேற்றம் செய்யப்படுகிறது. எந்த ஒரு மாவட்டத்தின் தேதி வாரியாக பதிவான மழை விவரங்களையும், நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ளலாம்.மாவட்டம், ஆற்றுப்படுகை, நீர் தேக்கத்தை தேர்வு செய்து, குறிப்பிட்ட மாவட்டத்திலுள்ள அணைகளின் மொத்த கொள்ளளவு, தற்போதைய நீர் இருப்பு தகவல்களை பெறலாம்.சூறாவளி, நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளப்பெருக்கு, இடி, மின்னல் உள்ளிட்ட பேரிடர்களின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு போஸ்டர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.உங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பேரிடர் சார்ந்த விவரங்களை, பெயர், மொபைல் எண், புகைப்பட விவரங்களுடன் இந்த செயலி மூலம் பதிவு செய்து, அரசு துறையினரின் கவனத்துக்கு கொண்டுசெல்லலாம். முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட மழை பாதிப்பு அடிப்படையில், மாவட்டத்தில் எந்தெந்த இடங்கள் வெள்ள பாதிப்பு அபாயம் உள்ளது என்கிற தகவல்கள் மேப் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.மழை, புயல் பாதிப்புகளின் போது தொடர்புகொள்வதற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் வாரியாக 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு மையங்களின் தொடர்பு எண்களும் 'டிஎன் - அலர்ட்' செயலியில் கொடுக்கப்பட்டுள்ளன.ஜி.பி.எஸ்., உடன் இணைக்கப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட இடத்தில், வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால், செயலியிலிருந்து, மொபைல் போனுக்கு அலாரத்துடன் கூடிய எச்சரிக்கை தகவல் வந்துசேரும். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள இச்சூழலில், அனைவரின் மொபைல் போனிலும் அவசியம் இந்த செயலி நிறுவிக் கொள்வது அவசியமான ஒன்று.