உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று மகிழ்ச்சி உண்டு; மனிதம் இல்லை

இன்று மகிழ்ச்சி உண்டு; மனிதம் இல்லை

திருப்பூர்; திருப்பூர் நகைச்சுவை முற்றம் டிரஸ்ட் சார்பில், 'சிரிப்போம்... சிந்திப்போம்...' நிகழ்ச்சி, நேற்று ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. செயலாளர் பூபதிராஜன் வரவேற்றார். மெஜஸ்டிக் நிறுவன நிர்வாக இயக்குனர் கந்தசாமி தலைமை வகித்தார்.உலக சமுதாய சேவா சங்க பேராசிரியர் ரவிக்குமார், 'ரசித்து வாழ வேண்டும்' என்ற தலைப்பில் பேசினார்.'மகிழ்ச்சி, மனநிறைவு அந்தகாலத்திலா? இந்தக்காலத்திலா?' என்ற நகைச்சுவை பாட்டரங்கம் நடந்தது. பொள்ளாச்சி கணபதி நடுவராக இருந்தார்.அந்தக்காலமே என்ற அணியில், கோவை மதன்பாரதி; இந்தக்காலமே என்ற அணியில், திருவண்ணாமலை சுமித்ரா பேசினர். பழநி முருகன் குழுவினரின் இன்னிசையுடன், பாட்டரங்கம் நடந்தது.இரண்டு தரப்பினரும், தங்கள் வாதங்களை, சினிமா பாடல்கள் வாயிலாக முன்வைத்தனர்.நடுவர் கணபதி பேசியதாவது:வீட்டில் இருக்கும் போது மொபைல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்; பார்வையில் படாமல் வைத்துவிட்டு, குடும்பத்தினருடன் பேசி மகிழ வேண்டும். தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் தினமும் அரை மணி நேரமாவது பேச வேண்டும்.மனிதனின் சராசரி வாழ்வு, 21 ஆயிரம் நாள்; அதில், 10 ஆயிரத்து, 500 நாட்கள் துாக்கத்தில் சென்றுவிடும்; மீதியுள்ள நாட்களில், 5,000 மணி நேரம் 'டிவி' அல்லது மொபைல் போனுக்கு செலவாவதாக ஆய்வுகள் கூறுகின்றன.பிறந்த குழந்தை சிரித்துக்கொண்டே இருக்கும்; அதாவது, ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் முறை சிரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. பள்ளி, கல்லுாரி, வேலை, திருமணம் என்று வளரும் போது, சிரிப்பு குறைந்துவிடுகிறது; அடியோடு மறந்து விடுகிறது.கவலை நமது கைக்குழந்தை கிடையாது; அதை தேவையில்லாமல் துாக்கி வைத்திருக்க வேண்டியதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியால், மனித தன்மையை இழந்துவிட்டோம்.மகிழ்ச்சி எல்லா காலத்திலும் இருந்தது; அந்தகாலத்தில் மனிதம் கலந்த மகிழ்ச்சி இருந்தது; இந்தகாலத்தில், மகிழ்ச்சி இருந்தாலும், மனிதம் மறைந்துவிட்டது. மகிழ்ச்சியுடன் மனித தன்மையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.டிரஸ்ட் துணை தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !